புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி, பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் உட்பட 13 கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி நேற்று டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:நிதி அமைச்சக மானியக் கோரிக்கை மீதான விவாதம் வரும் 27ம் தேதி நடைபெறும். அப்போது 13 கட்சிகள் சார்பில், லோக்சபாவில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டுவரும் தீர்மானமும் தாக்கல் செய்யப்படும். விலையை உயர்த்தி அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்வதற்காக, இந்த திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
அதே நாளில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, அ.தி.மு.க., – தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக்தளம், ராஷ்டிரிய லோக்தளம் உட்பட 13 கட்சிகள் சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் வெட்டுத் தீர்மானத்தை கொண்டு வரவில்லை. மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறோம்.இவ்வாறு யெச்சூரி கூறினார்.
அவர் பேட்டி அளித்த போது, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரை, ராஷ்டிரிய லோக்தளம் கட்சியைச் சேர்ந்த அஜித்சிங், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ரகுவன்ஷ் பிரசாத், சமாஜ்வாடியின் ரியோட்டி ராமன்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாசுதேவ் ஆச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா, தெலுங்கு தேசம் கட்சியின் நாகேஷ்வர ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரை கூறுகையில், ”விலைவாசி உயர்வு பிரச்னைகள் தொடர்பாக, எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பொது வேலை நிறுத்தம் மற்றும் வெட்டுத் தீர்மானத்தை எங்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கும்,” என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ரகுவன்ஷ் பிரசாத் கூறுகையில், ”விலைவாசி உயர்வுக்கு எதிராக கட்சிகள் ஏற்கனவே போராட்டத்தை நடத்தி வருகின்றன. பீகார் மற்றும் உ.பி.,யில் ‘பந்த்’ நடந்துள்ளது,” என்றார்.
Leave a Reply