புதுடில்லி: மருத்துவ தரம் காக்க வேண்டிய தலைமையே தரம் தாழ்ந்து போனது. இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறும் போது லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி.ஐ., போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மருத்துவ தரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மருத்துவம் தரம் காத்திட மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் தரம் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு தரத்தின் அடிப்படையில் அனுமதி வழங்குவது,பட்டம் பதிவு செய்யும் அதிகாரம் , டாக்டர்களின் பதிவுச்சான்று உள்ளிட்ட மேலான பொறுப்பு கொண்டது.
இந்த அமைப்பின் பணி நாட்டின் நம்பிக்கைக்குரிய இடம் ஆகும். ஆனால் இங்கும் லஞ்சம் தலைவிரித்தாடியிருக்கிறது. சாதாரண ஊழியர் மட்டோடு லஞ்சம் இருந்திருந்தாலே யாராலும் ஏற்க முடியாது. ஆனால் தலைமை பொறுப்பில் இருக்கும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் சிக்கியிருக்கிறார் என்பது தான் ஹைலைட்.
திடீரென போலீஸ் வந்தது : இங்கு தலைவராக இருப்பவர் கேதான் தேசாய். இந்த அமைப்பின் சர்வ அதிகாரமும் படைத்தவர். பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களிடம் ரூ . 2 கோடி கேட்டிருக்கிறார். பணம் தருவதாக ஒத்துக்கொண்ட இந்த தனியார் நிர்வாகத்தினர் , மத்திய குற்றப்புலனாய்வு ( சி.பி.ஐ) பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர். இங்கிருந்து தலைவரை பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது. ரூ. 2 கோடி பணம் கைமாறும் போது போலீசார் கேதான் தேசாயை லபக் செய்தனர். திடீரென போலீஸ் வந்தது கண்டு அதிர்ச்சியுற்ற தேசாய் திரு, திருவென முழிக்க மட்டுமே முடிந்தது. மேலும் அவருடன் இருந்த அதிகாரி ஜே,பி., சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இது தொடர்பான அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
லஞ்ச வழக்கில் சிக்கியவர் : தேசாய் இது போன்று தரம் இல்லாத பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கோடிகளை பெற்று அனுமதி வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் லஞ்ச புதை குழிகள் தோண்டப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. தேசாய் மீது கடந்த 2001 ம் ஆண்டில் லஞ்ச வழக்கில் டில்லி ஐகோர்ட்டில் நடந்த வழக்கின் போது பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீண்டும் இந்த பதவிக்கு எப்படி வந்தார் என்பது தற்போதைய கேள்விக்குறி .
Leave a Reply