ஐ.எஸ்.ஐ.க்கு ரகசிய தகவல்களை கடத்தினார்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய தூதரக பெண் அதிகாரி கைது; `ரா’ உயர் அதிகாரி மீதும் கண்காணிப்பு

posted in: மற்றவை | 0

941ac4d3-0ef1-4e69-850d-32b4423d6515_s_secvpfபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருபவர் மாதுரி குப்தா (வயது 53). இவர் அங்கு இரண்டாம் செயலாளர் மட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியான இவர், பதவி உயர்வு பெற்று, கடந்த 3 ஆண்டுகளாக, இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருகிறார். மாதுரி குப்தா, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

அவர் உருது மொழியில் புலமை பெற்றவர் என்பதால், அவரை மொழி பெயர்ப்புக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தூதரகத்தின் தகவல் பிரிவில் மாதுரி குப்தா அதீத அக்கறை காட்டியதால், அவர் மீது மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, இந்திய உளவுத்துறை மூலம் மாதுரி குப்தாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

இதில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. முக்கியமான ரகசிய தகவல்களை, பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.க்கு மாதுரி குப்தா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், `சார்க்’ மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லிக்கு வருமாறு மாதுரி குப்தாவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்தது.

அதை நம்பி, 4 நாட்களுக்கு முன்பு டெல்லி வந்த மாதுரி குப்தாவை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் 4 நாட்களாக உளவுத்தறையினரும், டெல்லி போலீசாரும் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதில் ஏராளமான அதிர்ச்சி தகவல்களை மாதுரி குப்தா வெளியிட்டார்.

பாகிஸ்தானில் பணியாற்றி வரும் இந்திய உளவு நிறுவனமான `ரா’-வின் உயர் அதிகாரி ஆர்.கே.சர்மா, தன்னிடம் அளித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.யில் பணியாற்றும் ராணா என்பவரிடம் கொடுத்து வந்ததாக மாதுரி குப்தா தெரிவித்தார். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து, முக்கிய தகவல்களை கடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். கொள்கை முடிவுகள், பாகிஸ்தானில் இந்தியர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அளித்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து, அரசாங்க ரகசியங்கள் சட்டத்தை மீறியதற்காக, மாதுரி குப்தாவை போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் அவரை டெல்லி கோர்ட்டு ஒன்றில் ஆஜர்படுத்தினர். அவரை மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

மாதுரி குப்தா கைது செய்யப்பட்ட தகவலை, மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை உறுதிப்படுத்தினார். பூடான் சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாசும் உறுதிப்படுத்தினார். மாதுரி குப்தா, விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் கூறினார்.

மாதுரி குப்தா, இதற்கு முன்பு, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திலும், வெளியுறவு அமைச்சகத்தின் பத்திரிகையிலும் பணியாற்றி உள்ளார். பாகிஸ்தானில் பணியாற்றிக் கொண்டே, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக வெளியுறவு அமைச்சக பெண் அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதற்கிடையே, மாதுரி குப்தாவிடம் ரகசிய தகவல்களை அளித்து வந்த `ரா’ உயர் அதிகாரி ஆர்.கே.சர்மா கண்காணிக்கப்பட்டு வருகிறார். பதவியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், மாதுரி குப்தாவின் நிஜ முகம், ஆர்.கே.சர்மாவுக்கு முன்பே தெரியுமா? என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *