தேசிய ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலங்களும், அண்டை மாநிலங்களுக்கு சகோதர மனப்பான்மையுடன் உதவ வேண்டும்.
அப்போது தான் தேசிய ஒருமைப்பாடு சீராகவும், சிறப்பாகவும் இருப்பதாக கருதமுடியும்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழகத்திற்கான வருடாந்திர நிதிஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று டில்லி வந்தார்.
தெற்கு டில்லி ஜெசோலாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் மைய கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:தமிழகம் மட்டுமில்லாமல், தென்மாநிலங்கள் முழுவதும் மையம் கொண்டிருந்த பெரியார், இப்போது டில்லியிலும் மையம் கொண்டுள்ளார். மையம் கொண்டிருக்கும் புயல் எப்போதும் சேதாரங்களை ஏற்படுத்தும். பெரியார் என்கின்ற புயலோ உன்னதமான மேம்பாடுகளை ஏற்படுத்தும். டில்லியில் ஏற்கனவே கட்டப்பட்ட பெரியார் மையம் இடிக்கப்பட்டு, இப்போது புதிதாக இந்த பெரியார் மையம் கட்டப்பட்டுள்ளது. அவரின் கருத்துக்கள், எழுத்துக்களை தொகுத்து பெரும் புதையல்களாக அடுத்த தலைமுறைக்கு தரும் நடவடிக்கைகள் பெரியார் மையம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில்கூட நிறைய கட்டடங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் பெரியாருக்கு உள்ளது. அந்த வகையில் டில்லியில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, தேசிய அளவில் அரசியல் பணியாற்ற எனக்கு அழைப்பு விடுத்தார். இதேபோன்று, இவரின் தந்தை ஷேக் அப்துல்லாவும் பலமுறை என்னிடம் கேட்டுள்ளார். கொடைக்கானலில் அவர் சிறையில் இருந்தபோது பலமுறை அவரை சந்தித்து அன்பு பாராட்டியவன் நான். அவர் மறைந்த பின், கொடைக்கானலில் அவர் தங்கிய விருந்தினர் மாளிகைக்கு, ஷேக் அப்துல்லா பெயரை வைத்தேன். அகிலஇந்திய அளவில் அரசியலுக்கு வந்தால் தான் என்றில்லை; இருந்த இடத்திலிருந்தே என்னால் பல காரியங்களை செய்யமுடியும்.
மாநில சுயாட்சி குறித்து பல கருத்தரங்கங்களை ஜோதிபாசு, அஜய்முகர்ஜி, ஷேக் அப்துல்லா உள்ளிட்ட பலரும் நடத்தினர். அதில் சொல்லப்பட்ட கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை. மேலும், அதற்கான சூழலும் உருவாகவில்லை. இதனால், தமிழகத்தைப் போல, பெரியாரின் தாக்கத்தை மற்ற மாநிலங்களில் ஏற்படுத்த முடியவில்லை.தமிழகத்தில் எல்லா வளங்களும் உண்டு. முந்தைய காலங்களில் பொதுவாக, நீர்வளம், நிலவளம் மிக்க தமிழகம் என சொல்வது வழக்கம். அதுகூட கற்பனை தான். உண்மையில் தமிழகத்தில் நீர்வளம் மிகக் குறைவு. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளாவில் நீர்வளம் நிரம்ப உள்ளது. தன் தண்ணீர் தேவைகளுக்கு இம்மாநிலங்களை தான் தமிழகம் நம்பி உள்ளது. இவை தேவைக்கு அதிகமாக தண்ணீர் வைத்திருந்தாலும்கூட என்ன காரணத்தாலோ தண்ணீர் தர மனம் வரவில்லை.
தேசிய ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலங்களும், அண்டை மாநிலங்களுக்கு சகோதர மனப்பான்மையுடன் உதவ வேண்டும். அப்போது தான் தேசிய ஒருமைப்பாடு சீராகவும், சிறப்பாகவும் இருப்பதாக கருத முடியும். தமிழக மக்களை பட்டினி போட்டு வேடிக்கை காட்டுவதைவிட, அவர்கள் படும் வேதனையை ரசித்துக் கொண்டிருப்பதுகூட இன்னும் தவறு. மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறுகளை, அவர்களே அடித்துக்கொண்டு வரட்டும் என்றில்லாமல், தமக்கும் பொறுப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையில் ஆவன செய்ய வேண்டும்.நான் ஈரோட்டு குருகுலத்தில் பயின்றவன் என்பதால், இந்த பெரியார் மையத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் குருதட்சணை வழங்குகிறேன்.இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, வாசன், திருமாவளவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் டி.பி.யாதவ் ஆகியோர் பேசினர். -நமது டில்லி நிருபர்-
Leave a Reply