சென்னை:’வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பு:பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி வாய்ந்த நபர்களை, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், பரிந்துரை பட்டியல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, 31 ஆயிரத்து 170 பேருக்கு, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்.பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைவருக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்த முகவரிக்கு, சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பான முழுவிவரங்களும் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in 3ம் தேதி (இன்று) வெளியிடப்படும்.அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவர் சார்ந்த தகவல்களை அச்செடுத்து, அதனடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
இதில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. அழைப்புக் கடிதத்தில் உள்ளபடி, அனைத்து சான்றிதழ்களையும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.இச்சான்றுகள் அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப் படுவர். சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சி முடிந்தபின் அளிக்கப்படும் எந்தச் சான்றுகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Leave a Reply