மே 12ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு?

posted in: கல்வி | 0

மதுரை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, வரும் 12ம் தேதி வெளியிட தேர்வுத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஏப்., 22ம் தேதியுடன், விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிந்தது. முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளில், தேர்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது. மாணவர்களின், ‘டம்மி’ நம்பர் பாடங்களுக்கான விடைத்தாள்களில், நம்பர் எழுதுவதில் எப்போதுமே சில குழப்பங்கள் ஏற்படுவது வழக்கம்.

இவ்வகையில் சில ஆயிரம் விடைத்தாள்களில் இந்த நிலை ஏற்படும். அவற்றை சரிசெய்யும் பணியில், தேர்வுத்துறை அதிகாரிகள் முழுநேரப் பணியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய, ஒரு வாரகாலமாவது ஆகும் என கருதப்படுகிறது. டேட்டா சென்டரில் தற்போது மதிப்பெண்களை ஒருங்கிணைத்து பதிவு செய்யும் பணி இரண்டு ஷிப்டுகளில் நடந்து வருகிறது. டம்மி நம்பர் குழப்பம் முடிவுக்கு வந்த பின், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வரும் 12ம் தேதி முடிவை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.

கூடுதல் மதிப்பெண்: பிளஸ் 2 கணித தேர்வில், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கவலைப்பட்டனர்.

தலைமை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், கணிதப் பாடத்திற்கு 19 மதிப்பெண்கள் வரை கூடுதலாக அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தேர்வுத்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளனர். ஆனால் மதிப்பெண் அளிக்க வாய்ப்பில்லை என தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்து விட்டது. இந்நிலையில், அமைச்சரக அளவில் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *