உயர் அதிகாரிகள் சிக்குகின்றனர்?மோசடி மருந்து விவகாரம்

posted in: மற்றவை | 0

tblfpnnews_51688349247காலாவதி மருந்து விவகாரத்தில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய, சில உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.

பொதுமக்களின் உயிர் காக்கும் மருந்துகளில், போலி மற்றும் காலாவதி மருந்துகளை விற்பனைக்கு உலவ விட்ட விவகாரம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இது தொடர்பான வழக்கில், மருந்து மோசடி மன்னன் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீனாட்சி சுந்தரம், பிரதீப் சோர்டியா, சஞ்சய்குமார் ஆகியோரது மருந்து குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மற்றும் போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கை தன் வசம் வைத்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களில் முக்கியமானவர்களை கோர்ட் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், போலி லேபிள்கள் தயாரித்து அளித்தவர்கள் உள்ளிட்ட சிலர் சிக்கினர்.

மேலும், மீனாட்சி சுந்தரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தொடர்பு குறித்த தகவல்களை போலீசார் பெற்றனர். இதன் அடிப்படையில், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன், மருந்து ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் மீது போலீசாரின் பார்வை திரும்பியது. தொடர்ந்து முதல்கட்டமாக, ராமாபுரத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன், கோடம்பாக்கத்தில் உள்ள மருந்து ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.அதில், பணம், நகை மற்றும் பல ஆவணங்கள் சிக்கின. அங்கிருந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க இருவரையும் அழைத்திருந்தனர்.

இதில், உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் ஆஜரானார். இவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பரணிக்குமார் விசாரணை நடத்தினார்.மேலும் சில தகவல்களை பெற வேண்டியுள்ளதால், மீண்டும் அவரை வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஆஜராக வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை தொடர்ந்து நேற்று மருந்து ஆய்வாளர் விஜயகுமார் சி.பி.சி.ஐ.டி., போலீசார் முன்பு ஆஜரானார்.இவர், மீனாட்சி சுந்தரத்திற்கும், மருந்து கட்டுப்பாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் ஏஜன்டாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், மீனாட்சி சுந்தரத்தின் செயல்பாடுகள், அதிகாரிகள் தொடர்பு குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன.இவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மருந்து கட்டுப்பாட்டுத்துறை உயர் அதிகாரிகள் சிலரும் விரைவில் சிக்குவார்கள் என தெரிகிறது. பொதுமக்களை பெரிதும் பாதித்த இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் போலீசாரும் உறுதியுடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *