தூத்துக்குடி: இந்தியா முழுவதும் சரக்கு ஏற்றி செல்லும் நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் கட்டினால் போதும் என்று மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் லாரிகள் பயன்பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் வாடகை குறைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மட்டும் நேஷனல் பெர்மிட் லாரிகள் 1 லட்சத்திற்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஒரு லாரி ஆந்திராவிற்கு சரக்கு ஏற்றி செல்ல வேண்டுமென்றால் அந்த மாநிலத்திற்கு செல்வதற்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இதே போல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரி செலுத்த வேண்டும்.
பொதுவாக நேஷனல் பர்மிட் லாரிகள் குறைந்தது 5 அல்லது 6 மாநிலத்திற்காவது பொருட்கள் ஏற்றி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 ஆயிரம் வரி கட்ட வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் குறைந்தது ஒரு லாரி 50 ஆயிரம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சமீபத்தில் நேஷனல் பர்மிட் லாரிகளுக்கு பெருமளவில் வரி உயர்த்தப்பட்டது. இது லாரி உரிமையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அளவுக்கு வரி உயர்வு இருந்தால் தங்களுக்கு கட்டுபடியாகாது என்று கூறிய அவர்கள், தமிழகத்தில் உள்ள அதிகமான லாரிகள் ஆந்திரா, புதுசேரி போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பெர்மிட்டை சரண்டர் செய்ய துவங்கின. இது போன்ற நிலை இந்தியா முழுவதும் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலத்திற்கும் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவானதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக தமிழக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசினர். இதே போல் பல மாநிலங்களில் இருந்தும் நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு வரி விதிப்பு சம்பந்தமாக நல்ல முடிவு மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மே 1ம் தேதி முதல் நேஷனல் பர்மிட் லாரிகள் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரி கட்டினால் போதும் என்று புதிய உத்திரவை பிறப்பித்துள்ளது.
Leave a Reply