தமிழகத்தில் ஆறு எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க ஜூன் 17ல் தேர்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:தமிழகத்தில் ஆறு உட்பட ராஜ்ய சபாவில் காலியாகும் 55 எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அன்பழகன், டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, கோவிந்தராஜன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், பா.ம.க., அன்புமணி என, தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பிக்கள் ஆறு பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அதேபோல், உ.பி.,யில் 11, மகாராஷ்டிரா, ஆந்திராவில் தலா 6, பீகாரில் 5, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஒரிசா, மத்திய பிரதேசத்தில் தலா 3, சட்டீஸ்கர், பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்டில் தலா 2, உத்தரகண்டில் ஒன்று என, 12 மாநிலங்களைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி.,க்கள் 49 பேரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

இவர்களுக்குப் பதிலாக புதிதாக 55 எம்.பி.,க்களைத் தேர்வு செய்ய ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இருந்து 49 எம்.பி.,க்களைத் தேர்வு செய்ய ஜூன் 17ம் தேதியும், ஆந்திராவில் ஆறு எம்.பி.,க்களைத் தேர்வு செய்ய ஜூன் 14 ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.இதுதவிர, ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யான கிருஷ்ணன் லால் பால்மிகி மரணம் அடைந்ததால், அவரது இடத்திற்கும் புதிதாக ஒரு எம்.பி., தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஆந்திராவில் நடக்க உள்ள ராஜ்ய சபா தேர்தலுக்கான முறையான அறிவிப்பு, மே 28ம் தேதி வெளியிடப்படுகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 4ம் தேதி. ஜூன் 14ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதேநாளில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.தமிழகம் உட்பட இதர 12 மாநிலங்களில் நடைபெற உள்ள ராஜ்ய சபா தேர்தலுக்கான முறையான அறிவிப்பு மே 31ம் தேதி வெளியிடப்படும். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 7. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 10. ஓட்டுப்பதிவு 17ம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *