ரிலையன்ஸ் எரிவாயு விலை மோதல்: முகேசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

07-mukesh-anil-ambani200டெல்லி: கிருஷ்ணா கோதாவரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிகள் இடையே ஏற்பட்ட மோதலில் முகேசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3 நீதிபதிகள் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் இரு 2:1 என்ற விகிதத்தில் முகேசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த இரு சகோதரர்களுக்கும் இடையே சண்டை மூண்டு ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாக உடைந்ததையடுத்து சில தொழிலதிபர்கள் தலையீட்டின்படி சொத்துக்களும் நிறுவனங்களும் பிரிக்கப்பட்டன.

அதன் படி குடும்ப ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. அதன்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் (கே.ஜி.பேசின்) எடுக்கப்படும் எரிவாயுவை மார்க்கெட் விலைக்கு கீழ் விற்பனை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஒரு யூனிட் எரிவாயுவை 2.34 அமெரிக்க டாலர் என்ற விலையில் அனில் அம்பானி நிறுவனத்துக்கு 17 வருடங்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை முகேஷ் அம்பானி திடீரென மீறினார். கே.ஜி. பேசின் இயற்கை எரிவாயு அரசுக்கு சொந்தம் என்பதால், அதை குடும்ப ஓப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விலைக்கு கொடுக்க முடியாது என்றும், மத்திய அரசு நிர்ணயித்த விலையான 4.2 அமெரிக்க டாலருக்கு தான் எரிவாயுவை விற்க முடியும் என்றும் கூறினார்.

அண்ணனின் இந்த முடிவை எதிர்த்து அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் நீதிபதி சதாசிவம் முகேசுக்கு ஆதரவாகவும் இன்னொரு நீதிபதியான சுதர்சன ரெட்டி அனிலுக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி தலையிட்டு சதாசிவத்தின் தீர்ப்பை ஆதரித்து முகேசுக்கு ஆதரவான தீ்ர்ப்பை அறிவித்தார். இதனால் நீதிமன்றத்தின் பெரும் பரபரப்பு நிலவியது.

நீதிபதி சதாசிவம் தீ்ர்ப்பு:

நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில், எரிவாயு என்பது நாட்டின் சொத்து, மக்களின் சொத்து. இதனால் இதன் விலை தொடர்பான விஷயத்தில் ரிலையன்ஸ் குடும்பமும் சகோதர்களும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது.

எரிவாயு மக்களை அடையும் வரை அது அரசாங்கத்தின் சொத்தாகும். தயாரிப்பு-பகிர்வு ஒப்பந்தப்படி ஒரு யூனிட் எரிவாயுவின் விலையை அரசு 4.2 டாலராக நிர்ணயித்துள்ளது. இது தான் உண்மையான விலையாக இருக்க முடியும். இந்த விலையைவிடக் குறைவான விலைக்கு எரிவாயுவைத் தர வேண்டும் என்று யாரும் கோர முடியாது.

இந்த விவகாரம் குறித்து இரு சகோதரர்களின் நிறுவனங்களும் மீண்டும் பேசி, 6 வாரங்களுக்குள் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் (அதாவது புதிய விலையை நிர்ணயிக்க வேண்டும்) என்றார்.

நீதிபதி சுதர்சன ரெட்டி வேறு தீர்ப்பு:

இதையடுத்து நீதிபதி சுதர்சன ரெட்டி தனது தீர்ப்பை வழங்கினார். அது அனில் அம்பானிக்கு ஆதரவாக அமைந்திருந்தது.

இதையடுத்து தலையிட்ட தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பை ஆதரித்தார்.

இதனால் நீதிபதிகள் 2:1 என்ற விகிதத்தில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பின்படி ஒரு யூனிட் எரிவாயுவின் விலையை 4.2 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேல் வைத்து அனில் அம்பானிக்கு, முகேஷ் அம்பானியால் விற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பை நீதிபதிகள் அறிவித்தபோது அனில் அம்பானி கோர்ட் அறையில் இருந்தார். தீர்ப்பை கேட்டதும் அவர் அமைதியாக எழுந்து வெளியேறினார். வெளியில் காத்திருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அனில் அம்பானி பங்குகள் விலை சரிவு:

இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் வேகமாக உயரத் தொடங்கின. 3 சதவீத உயர்வை அவை சந்தித்தன. அதேசமயம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனப் பங்குகள் 10 சதவீத சரிவை சந்தித்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு மதிப்பு 3 சதவீதம் உயர்ந்து ரூ. 1045.80 ஆக இருந்தது. அனில் நிறுவனப் பங்குகளின் விலை ரூ. 60 ஆக குறைந்துள்ளது.

இதனால் ஏற்கனவே காலையில் ஏற்பட்ட சரிவோடு மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மேலும் சரிவை சந்தித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *