மாணவர்களுக்கு அரசு செலவிடும் தொகையை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் : மெட்ரிக் பள்ளிகள் எதிர்பார்ப்பு

posted in: கல்வி | 0

மதுரை : அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவிடும் தொகையை, தனியார் சுயநிதி பள்ளிகளும் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என, மதுரை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மதுரை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. பொருளாளர் கி÷ஷார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மிகக் குறைவானது என்ற கருத்து தெரிவித்த சங்கத்தினர், அதை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினர். தமிழக அரசு, உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கென ஏராளமான தொகை செலவிடுகிறது. இலவச சீருடை, நோட்டுப் புத்தகம், சைக்கிள், பஸ் பாஸ், சத்துணவு, கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் என பல வகைகளில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்துக்கும் மேல் செலவிடுகிறது. அதே போன்ற அளவு தொகையை தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

சுயநிதி பள்ளிகளுக்கு அரசு தற்போது நிர்ணயித்துள்ள கட்டணத்தில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதும், மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதும் கடினம். எனவே இக்கட்டண அறிவிப்பால் மாணவர்களின் கல்வித் தரம்தான் வெகுவாக பாதிக்கப்படும். பள்ளிகளுக்கான கட்டடம், சம்பளம், பராமரிப்பு என 21 வகை செலவினங்களில், ஐந்து வகையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, மீதியுள்ள 16 வகை கட்டணத்தை அரசு நியமித்த கமிட்டி கணக்கில் கொள்ளாததை கண்டிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாறிவரும் உலக சூழல் மற்றும் பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தமிழக மாணவர்கள், பிற மாநில மாணவர்களுடன் அகில இந்திய தேர்வுகளில் போட்டியிடும்போது பின்தங்கும் சூழல் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால், மெட்ரிக் பள்ளிகளின் சங்கம் பிற மாவட்ட சங்கங்களை இணைத்து, மாநில அளவில் விரைவில் கோரிக்கை மாநாட்டை நடத்த வேண்டும். முன்னதாக ஒவ்வொரு பள்ளியின் சார்பிலும், தங்கள் கோரிக்கை மனுக்களை அரசுக்கு அனுப்புவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *