சென்னை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பித் தர, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்ரீகணேஷ் பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த மனு:
புதுச்சேரியில் ஒன்பது தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஊழியர்கள் சம்பளம், அடிப் படை வசதிகள், கல்வி நிறுவன விரிவாக்கம், மேம்பாட்டு வசதிகள், எதிர்கால திட்டங்கள் இவற்றை கருத்தில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு 2009-10ம் ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக 26 ஆயிரம் ரூபாயை நீதிபதி குழு நிர்ணயித்தது. இது தவிர வேறு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. கல்விக் கட்டணத்தில் தேர்வுக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், பல்கலை மேம்பாட்டு நிதி உள்ளிட்டவையும் அடங்கும்.எங்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் இருந்து மொத்தம் 32 ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்தோம்.
சிறப்பு கட்டணம் 3,000 ரூபாய், நூலக கட்டணம் 1,500 ரூபாய், பரிசோதனை மற்றும் இன்டர்நெட் கட்டணம் 1,500 ரூபாய் என மொத்தம் 32 ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்தோம். ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியதால், ஊழியர்களின் சம்பளம் அதிகரித்துள்ளது.கல்லூரிகளுக்கு ஏற்பட்ட கூடுதல் சுமையால், கூடுதலாக கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டியதுள்ளது.
ஒவ்வொரு மாணவனுக்கும் 26 ஆயிரத்தில் இருந்து 32 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளோம். எனவே, நீதிபதி குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் செல்லாது; அதை ரத்து செய்ய வேண்டும்.தமிழகம், கேரளாவில் நிர்ணயிக்கப்பட்டதற்கு இணையாக எங்களுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, எட்டு தனியார் பொறியியல் கல்லூரிகளும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன.மனுக்களை நீதிபதி என்.பால் வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் யசோத்வரதன், வக்கீல் ரபுமனோகர் ஆஜராகினர். மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய, கட்டண நிர்ணயக் குழு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. எனவே, விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி என்.பால் வசந்தகுமார், அதுவரை கட்டணத்தை திருப்பித் தர தடை விதித்தார்.
Leave a Reply