சென்னை : பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு புது சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த பட்ச தகுதிமதிப்பெண் இந்த பிரிவினருக்கு 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: ‘தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை, அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றாலே, பொறியியல் படிப்பில் சேரலாம் என்ற அளவிற்கு குறைக்க வேண்டும்’ என, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களும், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் கல்லூரி முதல்வர்களும் கோரிக்கை விடுத்தனர். இதை, தமிழக அரசு பரிசீலித்து, முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையை பெற்று, பொறியியல் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், பொதுப்பிரிவினருக்கு (ஓ.சி.,) 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு (பி.சி.,) 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (எம்.பி.சி.,) 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்(எஸ்.சி., / எஸ்.டி.,) பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே (35 சதவீத மதிப்பெண்) பொறியியல் படிப்பில் சேரலாம். இதனால், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படுவதோடு, மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு, மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரிக்கும். பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக, முதற்கட்டமாக இரண்டு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 209 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. தேவைப்பட்டால், இன்னும் கூடுதலாக விண்ணப்பங்களை அச்சிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதாலும், பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து வரும் முதல் தலைமுறையினர், கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்தால், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டதாலும், பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கிறோம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள். தேவையான நாட்கள் இருப்பதால், கடைசி நாள் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.
பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து வரும் முதல் தலைமுறையினருக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் அனுமதி கிடைத்தாலும், மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மட்டும், அரசே செலுத்தும். அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப் பல்கலைக் கழகமாக மாற்றவும், மதுரையில் புதிய அண்ணா பல்கலைக் கழகம் அமைக்கவும், சட்டசபையில் சட்டம் இயற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது. ஒப்புதல் வந்ததும், அதற்கான மேல்நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இந்த ஆண்டு, குறைந்தபட்சம் பத்து கல்லூரிகளை ஒருமைப்பல்கலைக் கழகங்களாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தை ஒருமைப்பல்கலைக் கழகமாக மாற்ற முடிவெடுத்ததற்காக, முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து, முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு பொன்முடி கூறினார்.
Leave a Reply