புதுடில்லி : இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தை மத்திய அரசு முடிவு செய்து வந்த வழக்கத்தை, இனி அக்கம்பெனிகள் முடிவு செய்யும்.
இதற்கான ஒப்புதலை நேற்று மத்திய அமைச்சரவை அளித்தது. ஆகவே, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு விரைவில் அறிவிக்கப்படலாம்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகியவை மத்திய அரசின் விலைக்கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதிகரிப்பதால், இதன் சந்தை விலையை நிர்ணயிப்பதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது.அதனால், எண்ணெய் கம்பெனிகள் நஷ்டம் அடைகின்றன. சமீபத்தில் அரசு நிர்ணயிக்கும் நடை முறையை மாற்றி, சந்தை விலைக்கேற்ப முடிவு செய்யலாம் என்று பொருளாதார விவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சர்கள் குழு முடிவு செய்தது.இது கீர்த்தி பரேக் தந்த அறிக்கை மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் தந்த நஷ்ட நிலவரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தினால் தான் எண்ணெய் கம்பெனிகள் நஷ்டம் ஈடு செய்யப்படும்.
இந்த முடிவை இது வரை தாமதப்படுத்திய மத்திய அமைச்சரவை நேற்று இம்முடிவை எடுத்தது. செய்தித்துறை அமைச்சர் அம்பிகா சோனி மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அறிவித்தார். மேலும், இயற்கை எரிவாயு விலையும் இனி 20 சதவீதம் உயரும் என்றார்.இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல்காஸ் விலை உயர்வு அடுத்த சில நாட்களில் முடிவாகும் என்று தெரிகிறது.மேலும், நேற்று அமைச்சரவையில் பெரிய அளவில் சர்க்கரை கையிருப்பு வைத்திருப்பவர்கள் இனி 15 நாட்கள் வரை அதிக வரம்பில் சர்க்கரை வைத்திருக்கலாம். மதுபான தயாரிப்பாளர்கள், மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் ஸ்டாக் அளவு இனி 15 நாட்கள் வரை அதிக பட்சமாக வைத்திருக்க அனுமதிக்கப்படும். சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பும் சந்தையில் அதன் விலை இறக்கமும் அரசு இம்முடிவை எடுக்க காரணமாக அமைந்தது.
Leave a Reply