புது தில்லி, மே 21: கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமை உண்டு; அவ்வாறு தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு காரணமின்றி கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கண்ணனூர் மாவட்ட முஸ்லிம் கல்வி சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கல்வி சங்கம், சர் சையத் கல்லூரியில் மேல்நிலைக் கல்விப் பாடத் திட்டத்தை தொடங்க மாநில அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு சட்டவிதிகளில் இடமில்லை எனக் கூறி அரசால் அனுமதி மறுக்கப்பட்டதால் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியது. புதிய பாடத் திட்டத்தைத் தொடங்க அந்த கல்லூரிக்கு சட்டபூர்வ உரிமை கிடையாது எனக் கூறி கேரள உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கல்வி நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Leave a Reply