அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுளையாக மாதந்தோறும் 20 ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம் ரூபாய் என சம்பளத்தை அள்ளி, அள்ளி கொடுத்தாலும், கற்பித்தலில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடுவதில்லை என்பது, சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
மாநில அளவிலான, “ரேங்க்’களில் ஒரு இடத்தைக் கூட அரசுப் பள்ளிகள் பிடிக்கவில்லை. மாறாக, தனியார் பள்ளிகள் குறைந்த சம்பளம் கொடுத்தாலும், மாநில அளவில் ஒட்டுமொத்த இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.
விலைவாசி விஷம் போல் ஏறுவதுபோல், பள்ளிக்கல்வித்துறை பட்ஜெட்டும், “ஜெட்’ வேகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2009-10ல் 9,147 கோடி, இந்த நிதியாண்டுக்கு 10 ஆயிரத்து 147 கோடி. ஒரே ஆண்டில் 1,000 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், நிதி ஒதுக்குவதன் நோக்கம் நிறைவேறி வருகிறதா, கல்வித்தரம் உயருகிறதா, தனியார் பள்ளிகளின் சாதனையை, பெரும்பான்மை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளால் உடைக்க முடிகிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினால், எதற்கும் பதில் கிடைக்காது.
முந்தைய ஆட்சியைவிட, இந்த ஆட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்தவர்கள் பணி நிரந்தரம், ஏராளமான சலுகைகள், ஏற்கனவே மாதந்தோறும் சுளையாக 20 ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம் ரூபாய் என சம்பளம் பெற்று வந்தவர்கள், ஆறாவது ஊதியக்குழு அமலுக்கு வந்தபின் மேலும் எகிறிவிட்டது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு சம்பளமாகத்தான் போகிறது. திட்டங்களுக்கான ஒதுக்கீடு என்பது மிகவும் சொற்பம். கடந்த ஆண்டில், 9,147 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தாலும், திட்டத்திற்கான ஒதுக்கீடு 1,063 கோடி ரூபாய் தான். அதேபோல், இந்த ஆண்டு மொத்த ஒதுக்கீடு 10 ஆயிரத்து 147 கோடி ரூபாய் என்றாலும், திட்டப் பணிகளுக்கான ஒதுக்கீடு, 1,249 கோடி ரூபாய் தான்.
மீதிப்பணம் முழுவதும் சம்பளமாக கரைகிறது. அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளமாக கோடி, கோடியாக செலவழித்தாலும், கல்வித்தரம் இன்னும் உயரவில்லை. கல்வித்தரத்தை அறியும் அளவுகோளாக, பொதுத்தேர்வு முடிவுகள் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான முடிவுகளைப் பார்த்தால், மாநில அளவிலான ஒட்டுமொத்த இடங்களையும் தனியார் பள்ளிகளே வாரிச் சுருட்டி சாதனை படைத்துள்ளன. ஒரு இடம் கூட அரசுப் பள்ளிகளுக்கு இல்லை. முதல் இடத்தை தூத்துக்குடி மாணவர் ஒருவரும், இரண்டாம் இடத்தை மூன்று மாணவர்களும், மூன்றாம் இடத்தை ஐந்து மாணவர்களும் பிடித்தனர். ஒன்பது மாணவர்களும், ஒன்பது தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்கள், உயர்கல்வி படிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுள்ளது.
இந்த ஒன்பது இடங்களில் ஒரு இடத்தைக் கூட அரசு பள்ளி மாணவர்களால் பிடிக்க முடியாததற்கு, யார் காரணம் என்பது அரசுக்கே வெளிச்சம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களைப் போல் சம்பளம் கொட்டி கொடுப்பதில்லை; குறைவான சம்பளம் தான். ஆனாலும், கற்பித்தல் திறன், கடின உழைப்பு மற்றும் நிர்வாகத்தின் நெருக்கடி போன்ற காரணங்களால், அவர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்களை ஜொலிப்பவர்களாக மாற்றுகின்றனர். இதுபோன்ற நிலை, அரசு பள்ளிகளிலும் ஏற்படும்போது தான், உண்மையான சமச்சீர் கல்வி மலரும்.
Leave a Reply