ஐதராபாத் : சிங்கப்பூரைச் சேர்ந்த மின்துறை நிறுவனமான, ‘செம்ப்கார்ப்,’ அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் (எப்.டி.ஐ.,) அடிப்படையில் ஆந்திராவில் 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் அனல்மின் நிலையம் துவங்குகிறது.
அதற்கு ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றுடன் நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ‘செம்ப்கார்ப்’ நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்தது. மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ஆந்திர முதல்வர் ரோசய்யா முன்னிலையில் இந்நிறுவனம், ஆந்திராவின் காயத்ரி எனர்ஜி வென்சர்ஸ் நிறுவனத்துடன் நேற்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற இடத்தில் அனல் மின் நிலையம் ஒன்று துவக்க உள்ளது. இத்திட்டம் அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.,) என்ற கொள்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
6,869 கோடி ரூபாய் முதலீட்டில், 1,320 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தின் முதல் பகுதி கட்டுமானப் பணிகள் இன்னும் 40 மாதங்களில் முடிக்கப்படும். அதைத் தொடர்ந்து, 1,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தின் இரண்டாம் பகுதி இன்னும் ஓராண்டுக்குள் துவக்கப்படும். இதுகுறித்து அமைச்சர் ஷிண்டே கூறுகையில், ‘நான் மின்துறை அமைச்சராகப் பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் இதுதான் அன்னிய நேரடி முதலீட்டின் கீழ் துவக்கப்படும் முதல் திட்டம். 2003ன் மின்சாரத் துறைச் சட்டம், 100 சதவீத எப்.டி.ஐ.,யை அனுமதித்த பின்னும் அதற்குப் பெருமளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதுதான் முதல் வெற்றிகரமான திட்டமாக அமைந்துள்ளது’ என்றார். ‘செம்ப்கார்ப்’ நிறுவனம் முதன் முதலாக அனல் மின் நிலையத்தை இந்தியாவில் அமைப்பதும் இதுதான் முதல் முறை.
Leave a Reply