சென்னை: நாட்டின் மின்சார துறையில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
மின்சார சட்டம் 2003ன் கீழ் இத்துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளபோதும், எதிர்பார்த்த அளவு முதலீடு பெறப்படவில்லை. அவர் மின் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன் இரண்டு அல்லது மூன்று வெளிநாட்டு நிறுவனங்களே இந்திய மின் துறையில் முதலீடு மேற்கொள்ள முன் வந்ததாக கூறினார். சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனமும், ஐதராபாத்தைச் சேர்ந்த காயத்ரி புராஜக்ட்ஸ்-ம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணப்பட்டினத்தில் கூட்டுத் திட்டத்தின் கீழ் 1,320 மெகா வாட் திறன் கொண்ட அதிநவீன அனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க உள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஐதராபாத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன் அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, நாட்டின் மின் உற்பத்தி துறையில் மேற்கொள்ளப்படும் முதல் அன்னிய நேரடி முதலீடு இது என்பதை சுட்டிக் காட்டினார். பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002 மற்றும் 2007) கூடுதலாக 42,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதில் 50 சதவீதமே (21,000 மெகா வாட்) எட்டப்பட்டது. இந்நிலையில் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான இலக்கான 78,700 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி இலக்கை எட்டும் வகையில் நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக, மாபெரும் மின் உற்பத்தி திறன் கொண்ட சாதனங்களை தயாரிக்கும் வகையில், பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மேலும் கூறினார். ஆந்திர மாநிலத்தில் யுரேனிய வளம் உள்ளது. இந்திய யுரேனிய கழகம், யுரேனியம் தாதுவை எடுக்கும் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக கடப்பா மாவட்டம் தும்மளப்பள்ளியையும், நால்கோண்டா மாவட்டம் ம்பாபூர்-பெட்டகட்டுவையும் தேர்வு செய்துள்ளது. தற்போது நம் நாட்டில் தனிநபர் மின்சார பயன்பாடு ஆண்டுக்கு சுமார் 800 யூனிட் என்ற அளவில் உள்ளது.
Leave a Reply