தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயித்து அறிவித்தது. இந்த கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தனர்.
தனியார் பள்ளிகள் இதுகுறித்து கோரிக்கை மனு கொடுத்தால் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.
நீதிபதி கோவிந்தராஜனை, இன்று தனியார் பள்ளி நிர்வாகிகள்ன மாநில பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தில் சந்தித்து ஏற்கனவே உள்ள கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். கல்வி அதிகாரிகளிடமும் முறையீடு செய்தனர்.
அவர்களிடம் நீதிபதி கோவிந்தராஜன் அரசு நிர்ணயித்த கட்டணத்தைதான் இப்போது பெறவேண்டும். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு புதிய கட்டணம் பற்றி முடிவு செய்யலாம் என்றார். இதுகுறித்து நீதிபதி கோவிந்தராஜன் கூறியதாவது:-
கல்வி கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தனியார் பள்ளிகளிடம் இருந்து இதுவரை 5,500 மனுக்கள் வந்துள்ளன. ஆய்வு செய்து உரிய முடிவை அரசு அறிவிக்கும்.
இதற்கிடையே தனியார் பள்ளி நிர்வாகிகள் இன்று என்னை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அரசு தற்போது நிர்ணயித்த கட்டணத்தைதான் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். கட்டண உயர்வு குறித்து மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்த பிறகுதான் அறிவிக்க முடியும். எனவே எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை அரசு நிர்ணயித்த கட்டணத்தைதான் இப்போது வாங்க வேண்டும். மறுபரிசீலனைக்கு பிறகு நிர்ணயிக்கப்படும் கட்டணம் மாணவர்களிடம் சரிசெய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply