இந்திய அணிக்கு மீண்டும் அவமானம் : ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது

large_12104ஹராரே : முத்தரப்பு தொடரில் இந்திய அணி அனுபவம்இல்லாத ஜிம்பாப்வே அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்து, பெரும் அவமானத்தை சந்தித்தது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ஜிம்பாப்வேயில் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று ஹராரேயில் நடந்த இரண்டாவது சுற்று லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப் வேயை எதிர்கொண்டது. “டாஸ்’ ஜெயித்த ஜிம்பாப்வே அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

விஜய் ஏமாற்றம்: இந்திய பேட்ஸ் மேன்கள் ஏனோதானோ என ஆடினர். துவக்கத்தில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஜோடி ஆமை வேகத்தில் விளையாடியதால், முதல் 10 ஓவர்களில் 26 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. கார்த்திக் 33 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் தடுமாறிய விஜய், 21 ரன்களுக்கு (56 பந்துகள்) வெளியேறி, மீண்டும் ஏமாற்றினார். விராத் கோஹ்லி (18) சோபிக்க தவறினார். பொறுப்பற்ற முறையில் ஆடிய கேப்டன் ரெய்னா (3), ரோகித் சர்மா (13) ரன்-அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது.

ஜடேஜா ஆறுதல்: யூசுப் பதான் (15), மீண்டும் சொதப்பினார். மிஸ்ரா (0), கைகொடுக்கவில்லை. சற்று நேரம் தாக்குப் பிடித்த டின்டா 16 ரன்கள் எடுத்தார். போராடிய ரவிந்திர ஜடேஜா, ஒரு நாள் போட்டிகளில் 4 வது அரை சதம் கடந்தார். இவர் 51 ரன்களுக்கு அவுட்டானார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டும் எடுத்தது.

சூப்பர் துவக்கம்: எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு, பிரண்டன் டெய்லர், மசகட்சா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஒரு நாள் அரங்கில் 19 வது அரை சதம் கடந்தார் டெய்லர். இவர், ஓஜா சுழலில் 74 ரன்களுக்கு (6 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார்.

மசகட்சா அசத்தல்: பின் மசகட்சாவுடன், கவன்ட்ரி இணைந்தார். இந்திய பந்துவீச்சை சிதறடித்த மசகட்சா, ஒரு நாள் அரங்கில் 16 வது அரை சதம் கடந்தார். அமித் மிஸ்ரா வீசிய ஆட்டத்தின் 30 வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய இவர், 66 ரன்களுக்கு (4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். கவன்ட்ரி 20 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் வெற்றி: பின்னர் கேப்டன் சிகும்பரா, தைபு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டின்டா பந்து வீச்சில் தைபு ஒரு “சூப்பர் பவுண்டரி’ அடிக்க, 38.2 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சிகும்பரா (16), தைபு (13) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் சுற்று லீக் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்த இந்திய அணி, மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து மிகுந்த ஏமாற்றம் அளித்து உள்ளது.

பைனல் வாய்ப்பு அம்போ? முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை, இந்திய அணி கிட்டத்தட்ட இழந்து விட்டது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், ஒரு வெற்றி மட்டுமே பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது. ஜிம்பாப்வே (9 புள்ளி), இலங்கை (5 புள்ளி) அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்திய அணி பைனலுக்கு முன்னேற வேண்டுமானால், இலங்கை அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் “போனஸ்’ புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைய வேண்டும். ஒருவேளை ஜிம்பாப்வே அணியை, இலங்கை அணி வீழ்த்தும் பட்சத்தில், மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் பைனலுக்கு முன்னேறும் அணிகள் தீர்மானிக்கப்படும். தற்போது இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் மோசமாக இருப்பதால், பைனலுக்கு முன்னேறுவது கடினம் தான்.

முதல் முறை: ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து 2 போட்டிகளில் முதல் முறையாக தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *