ராஜபக்சே வருகை எதிர்ப்பு போராட்டம்-வைகோ, நெடுமாறன், திருமா, சீமான் கைது

posted in: மற்றவை | 0

08-rajapak2000சென்னை: ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.

ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும் அவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் இன்று போராட்டத்தில் குதித்தன.

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் போலீஸார் தடை விதித்திருந்தனர்.

இருப்பினும் தடையை மீறி பேரணியும், போராட்டமும் நடைபெறும் என வைகோ அறிவித்திருந்தார். அதன்படி இன்றுகாலை பத்து மணியளவில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஆயிரக்ணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர். இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சே ஒழிக என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.

பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது

இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சிவசேனா கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13 தொண்டர்களை போலீஸார் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.

திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் ராஜபக்சேவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

நாமக்கல்லில் போலீஸ் தடையைமீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் ரயில் மறியல்

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர். இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்துக் கைது செய்தனர்.

பல்வேறு கட்சிகள்சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால் துணைத் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. பல நூறு பேர் கைதானார்கள்.

43 தமிழ்ப் புலிகள் கைது

தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் கெஞ்சல்- கைதாக மறுத்துச் சென்ற தமிழுணர்வாளர்கள்

புதுக்கோட்டையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது ஒரு சுவாரஸ்யம் நடந்தது.

புதுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளூடன் மேலும் பல அமைப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையென்றாலும் தடையை மீறி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி நீதிமன்றம் முன்பு முடிந்தது.

நீதிமன்றத்துக்குள் நுழைந்து கோஷமிட முயன்றனர். அதற்குள் போலீசார் வந்து தடுத்து விட்டனர். இதனால் நீதிமன்ற வாசலில் நின்றே கோஷமிட்டுவிட்டு மாலையில் பெரும் போராடம் நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

அவர்கள் போராட்டத்தை முடித்து விட்டு கலைந்து செல்லத் தொடங்கியபோது, அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் எல்லோரும் தயவு செய்து வாருங்கள். உங்களை கைது செய்ய வேண்டும் என்று அழைத்தார்.

அதற்கு தமிழுணர்வாளர்கள், ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்ய வேண்டியது தானே. இப்பொழுது வந்து கூப்பிட்டால் எப்படி என்று வர மறுத்தார்கள்.

இதையடுத்து தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்…வாருங்கள்..என்று தமிழ்மாறன் கூப்பிட்டார். அதற்கு அவர்களோ, அப்படி என்றால் மாலையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம். அப்போது கைது செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றனர்.

சென்னையில் திருமாவளவன் கைது

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Read: In English
கொடும்பாவிக்கு செருப்படி

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின் சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *