சிவகாசி : சிவகாசி வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ.,) பாலசுப்பிரமணியம். இவர், பிடிபடும் திருட்டு மணல் லாரிகளை விடுவிப்பதற்காகவும் மற்றும் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களில் கையெழுத்து போட பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஆர்.ஐ., அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு பணத்துடன் ஒருவர் வந்தார். அவரிடம் பாலசுப்பிரமணியம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சியமளாதேவி, இன்ஸ்பெக்டர் சாமிநாதனை பார்த்தார். சுதாரித்த அவர், அலுவலகத்தின் மற்றொரு வாசல் வழியாக ஓடி, டூவீலரில் வேகமாகச் சென்றார். போலீசார் விரட்டிச்சென்றும், அவரை பிடிக்க முடியவில்லை. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.பின்னர் போலீசார், ஆர்.ஐ., அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்திலும் விசாரணை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.
ஆர்.ஐ., அலுவலகம் பூட்டப்பட்டது. பொதுமக்கள் பலரும் ஆர்.ஐ.,யிடம் கையெழுத்து பெறுவதற்காக காலை 11 முதல் மதியம் 1 மணி வரை காத்திருந்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாலசுப்பிரமணியம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிக்கலாம் என காத்திருந்தோம். நாங்கள் மறைந்து இருந்ததை கவனித்து வாங்கிய பணத்தை கீழே போட்டு விட்டு அவர் ஓடிவிட்டார், என்றார்.
சிவகாசி ஆர்.டி.ஓ., கொம்பையன் கூறியதாவது: பாலசுப்பிரமணியத்தை போனில் தொடர்பு கொண்டு போது, அவரது மொபைல்போன் “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை அறிந்து மற்றொரு ஆர்.ஐ.,யை சான்றிதழ்களில் கையெழுத்திட ஏற்பாடு செய்தேன், என்றார்.
Leave a Reply