அமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை 23 லட்சம்: 3வது பெரிய இனமாக விஸ்வரூபம்

posted in: உலகம் | 0

11-us2000வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் 3வது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர்.

அமெரிக்காவை தேடி நாடி வந்து குடியேறும் வெளிநாட்டினர்களில் மெக்சிகர்கள்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அடுத்த இடத்தை பிலிப்பினோ எனப்படும் பிலிப்பைன்ஸ் இன மக்கள் பெறுகிறார்கள். 3வது இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ல் எடுக்கப்பட் மக்கள் தொகைக் கணக்குப்படி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 23 லட்சமாகும். இவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் அங்கேயே பிறந்து வளர்ந்த வம்சாவளியினர். 66.4 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள்.

கடந்த 2008ம் ஆண்டு வெளிநாட்டினர் வரிசையில், நம்மை விட முன்னணியில் இருந்த சீனர்களை இந்தியர்கள் முந்தினர்.

நியூயார்க், கலிபோர்னியா, நியூஜெர்சி, டெக்சாஸ் பகுதிகளில், மொத்தம் உள்ள இந்தியர்களில் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.

கலிபோர்னியாவில்தான் மிக அதிக அளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு மட்டும் 3 லட்சத்து 3 ஆயிரத்து 497 இந்தியர்கள் வசிக்கின்றனர். நியூஜெர்சியில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 732 பேரும், நியூயார்க்கில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 738 பேரும் வசிக்கின்றனர்.

டெக்சாஸில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 729 பேரும், இல்லினாய்ஸில் 1 லட்சத்து 29ஆயிரத்து 187 பேரும் வசிக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் கரீபிய தீவுகள், கனடா, கிழக்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரும் கூட பெருமளவில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் குடியேறி வசிக்கும் இந்தியர்கள் மற்ற வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது, நல்ல கல்வி அறிவு உடையவர்களாகவும் உள்ளனர் என அது கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *