புதுடில்லி :கடந்த சில ஆண்டுகளாக, சாலை விபத்துகள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
மக்கள் தொகையில் முதலிடம் வகித்து வரும் சீனாவை விட, இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியா, சாலை விபத்தில் முந்தி விட்டது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.கடந்த 2006ல் சாலை விபத்தில் சீனாவை இந்தியா மிஞ்சி விட்டது. 2008ல் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் சாலை விபத்துகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். இதற்குப் பல காரணங்களை அடுக்குகின்றனர் நிபுணர்கள்.
நிபுணர்கள் கூறுவதாவது:சாலை அமைப்பதில் மோசமான திட்டமிடுதல், சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது, லாரிகள், கார்கள் இவற்றோடு பயிற்சியே பெறாத டிரைவர்கள் இவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக பெருகி வருவது இவைதான் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.சாலைகளில் அலட்சியமான பயணம், நடைபாதைகளுக்கு அருகிலேயே கனரக வாகனங்கள் செல்வது, மக்களிடையே சாலை விதிமுறைகள் பற்றிய போதுமான அடிப்படை அறிவு இல்லாதது இவையும் சாலை விபத்துகள் நிகழக் காரணமாகின்றன.சாலை விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய போலீசாரே பல சமயங்களில் அதைக் கண்டு கொள்வதில்லை. விபத்துக்குக் காரணமானவர்களுக்கு மிகக் குறைந்தபட்சத் தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது.
அதோடு, வாகன உரிமம் பெறுவது என்பது மிக எளிதாகி விட்டது.சாலை விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்துப் போலீசார் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். சில நேரங்களில் சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் கண்முன்னால் பொதுமக்கள் சாலை விதிகளை மீறும்போது அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறது.விபத்தால் பாதிக்கப்பட்ட சிலர் ஒன்றிணைந்து சாலைப் பாதுகாப்பு மற்றும் மிதமான வேகத்தில் பயணம் இவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அது பரந்த அளவில் நிகழவில்லை.பல போலீஸ் நிலையங்களில் ஒரே ஒரு ஜீப் மட்டும்தான் உள்ளது.
விபத்து வழக்குகளில் துப்பு துலக்க வேண்டும் என்று போலீசார் நினைத்தாலும் அதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லை. லாரிகள் அளவுக்கு மீறி பாரம் ஏற்றிக் கொண்டு, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் மட்டுக்கு மீறிய வேகத்துடன் செல்வதும் தடுக்கப்பட வேண்டும்.இதுகுறித்துப் பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் அளித்தாலும் நிர்வாகமோ அரசியல் தலைவர்களோ கண்டுகொள்வதில்லை. பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில் தான் முனைந்து நிற்கின்றனர்.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply