கொடநாட்டுக்கு ஓய்வெடுப்பதற்காக செல்லவில்லை. அங்கு சென்றாலும் கட்சிப் பணிகளையே கவனிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் முதன்முதலாக தொண்டர்களை சந்தித்து மனு வாங்கியதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு மனு வாங்கியதாக மற்றொரு நாளிதழ் கூறியிருக்கிறது. இவை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட செய்திகள். 1982&ம் ஆண்டு அதிமுகவில் நான் இணைந்ததில் இருந்து இன்று வரை தொண்டர்களிடம் தினந்தோறும் மனுக்களை பெற்று வருகிறேன். 1983&ல் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் இடைவிடாமல் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். எம்ஜிஆருக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டேன். எம்ஜிஆருக்கு ஆட்சிப் பணியின் பளு அதிகம் இருந்ததால் கட்சி வேலைகளை நான் இழுத்துப் போட்டுக்கொண்டு கவனித்தேன். 1982&ல் எனக்கு வயது 34. தற்போது 62. இதனாலேயே எல்லோரையும் நேரில் பார்த்து மனுக்களை பெற முடியவில்லை.
போயஸ் கார்டன், கட்சி அலுவலகம், கொடநாடு என எங்கிருந்தாலும் எந்நேரமும் கட்சிப் பணிதான் ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
நான் கொடநாடு சென்றாலே ஓய்வெடுக்கப் போவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. கொடநாடு, குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. அதற்காக, அங்கு இருப்பவர்கள், அதிகாரிகள் எல்லாரும் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? நான் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு செல்லவில்லை. சதாசர்வ காலமும் கட்சிப் பணியையும் மக்கள் பணியையும்தான் கவனிக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Leave a Reply