பொறியியல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு?

posted in: கல்வி | 0

சென்னை : ஏ.ஐ.சி.டி.இ., புது விதிமுறைகள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது.

இதனால், இந்த ஆண்டு எந்தெந்த கல்லூரிகளில், எவ்வளவு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஏ.ஐ.சி.டி.இ., இன்னும் வழங்கவில்லை. வழக்கு திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அன்று துவங்கவிருந்த பொறியியல் கவுன்சிலிங்கும் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது.

பி.இ., – பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கிறது. இப்படிப்பிற்கு மே மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் இரண்டு லட்சத்து 2,133 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து சமர்ப்பித்தனர். இவர்களில், ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 506 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் தற்போது 446 பொறியியல் கல்லூரிகள், ஒன்பது ஆர்கிடெக்சர் கல்லூரிகள் உள்ளன. இதில் 28 கல்லூரிகள் மட்டுமே அண்ணா பல்கலை கல்லூரிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள். மீதமுள்ள 427 கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானவை. பொறியியல் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கையை நடத்த ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியையும், அண்ணா பல்கலைக் கழக இணைப்பையும் பெற வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., புதிய விதிமுறைகளை உருவாக்கியது. இவ்விதிமுறைகளை எதிர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த சில தனியார் பொறியியல் கல்லூரிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் 28ம் தேதியும், பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் 29ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதி துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு எந்தெந்த கல்லூரிகளில், எவ்வளவு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஏ.ஐ.சி.டி.இ., தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திற்கு வழங்கும். அந்த இடங்களுக்கு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கவுன்சிலிங் நடைபெறும். இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பழைய பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதியை புதுப்பிக்கும் பணியை ஏ.ஐ.சி.டி.இ., இன்னும் மேற்கொள்ளவில்லை.

இதனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த எந்தெந்த தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது; எந்தெந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. கல்லூரிகள், இடங்கள் விவரம் தெரியாமல் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் பொறியியல் கவுன்சிலிங்கை நடத்த முடியாது. இந்நிலையில், புதிய விதிமுறைகளை 309 தமிழக பொறியியல் கல்லூரிகள் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஏ.ஐ.சி.டி.இ., சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே அறிவித்தபடி, 28ம் தேதி கவுன்சிலிங் நடத்த தயாராக இருப்பதாக அரசு வக்கீல், கோர்ட்டில் தெரிவித்துள்ளார். அரசு முடிவின்படி, 309 கல்லூரிகளில் உள்ள இடங்கள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பொறியியல் கவுன்சிலிங்கில் மருத்துவப் படிப்பைப் போல மறு கவுன்சிலிங் நடத்தப்படுவதில்லை. சில கல்லூரிகளை விட்டு விட்டு கவுன்சிலிங் நடத்திவிட்டு, பிற்காலத்தில் விடுபட்ட கல்லூரி கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டால், முன்னதாக இடங்களை தேர்வு செய்த மாணவர்கள், விடுபட்ட கல்லூரிகளில் சேர விருப்பம் தெரிவிக்க வாய்ப்புள்ளது.

அப்போது முழு கவுன்சிலிங்கையும் மீண்டும் நடத்த வேண்டி வரும். இதனால், வரும் திங்கள்கிழமை துவங்கவிருந்த பொறியியல் கவுன்சிலிங் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. உயர்கல்வித்துறை அலட்சியம்: இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில், இவ்வளவு பிரச்னைகள் இருப்பது தமிழக உயர்கல்வித்துறைக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், உயர்கல்வித்துறை இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்தவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பிரச்னையில் உயர்கல்வித்துறை உரிய கவனம் செலுத்தி, கல்லூரி நிர்வாகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.,யுடன் பேசி, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்திருந்தால், பொறியியல் கவுன்சிலிங் உரிய காலத்தில் நடந்திருக்கும்; மாணவர்கள் காத்திருக்க வேண்டியிருக்காது.

இரண்டு வார அவகாசம் தேவை: பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி வழங்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டாலும், ஆய்வு நடத்தி அனுமதி வழங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது ஆகும் என ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு வாரங்களுக்கு பிறகே, கவுன்சிலிங்கில் இடம்பெறும் கல்லூரிகள், இடங்கள் விவரத்தை ஏ.ஐ.சி.டி.இ., தமிழக அரசுக்கு வழங்கும். எனவே, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது கவுன்சிலிங் தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது.

இதேபோல கர்நாடகாவிலும், இந்த ஆண்டு கவுன்சிலிங் முன்னதாக அறிவிக்கப்பட்டு, பின் ஏ.ஐ.சி.டி.இ.,யிடமிருந்து விவரங்கள் கிடைப்பது தாமதமானதால், கவுன்சிலிங் தள்ளிவைக்கப்பட்டதாக ஏ.ஐ.சி.டி.இ., வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்திலும், 1997ம் ஆண்டும், பின் 2004ம் ஆண்டு நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கால் கவுன்சிலிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங் நடத்த தயார்: ஐகோர்ட்டில் அரசு பதில் : ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 28ம் தேதி கவுன்சிலிங் நடத்த தயாராக இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகள் ஆண்டுதோறும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்கியது. அதன்படி, கல்லூரிகள் பற்றிய முழு விவரங்களையும் வெப்சைட்டில் வெளியிட வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகளை ஏ.ஐ.சி.டி.இ., விதித்தது.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் தனியார் கல்லூரிகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட், புதிய விதிமுறைகளை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இம்மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி தனபாலன் முன் நேற்று முன்தினம் துவங்கியது. ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் தியாகராஜன், புதிய விதிமுறைகளை பின்பற்ற 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயாராக உள்ளன என்றும், தொடர் அங்கீகாரம் கோரி அந்தக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன என்றும் கூறினார்.

இம்மனுக்கள் நேற்று நீதிபதி தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், கூட்டமைப்பு மற்றும் கல்லூரிகள் சார்பில் சீனியர் வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கங்குலி, என்.ஆர்.சந்திரன், வி.டி.கோபாலன், மாசிலாமணி, துரைசாமி, வக்கீல் ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் ஆஜராகினர். ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் சீனியர் வக்கீல்கள் தியாகராஜன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினர்.

ஏ.ஐ.சி.டி.இ., தரப்பில், “309 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளன. தனி நீதிபதியின் உத்தரவினால் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய முடியவில்லை. கோர்ட் உத்தரவு இல்லாமல் இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலாது&’ என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், “ஏற்கனவே கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதை தள்ளி வைக்க முடியாது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சம்பந்தப்பட்டது இது. 309 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் மூலம், புதிய விதிமுறைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அர்த்தம். அந்தக் கல்லூரிகளை கவுன்சிலிங்கில் சேர்க்கலாம்&’ என தெரிவிக்கப்பட்டது.கல்லூரிகள் கூட்டமைப்பு மற்றும் தனியார் கல்லூரிகள் சார்பில், “சில மாநிலங்களில் கவுன்சிலிங் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இங்கும் கவுன்சிலிங் தேதியை தள்ளிவைக்கலாம். மருத்துவக் கல்விக்கு தான் மாணவர்கள் சேர்க்கைக்கு கெடு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் அவ்வாறு இல்லை&’ என கூறப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், “28ம் தேதி கவுன்சிலிங் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது&’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி தனபாலன், “தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும் என்கிற பெற்றோரின் உரிமையில் பாதிப்பு ஏற்படக் கூடாது. இது அகில இந்திய அளவில் உள்ள பிரச்னை. பல மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் உத்தரவு பிறப்பிப்பேன். இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. அப்படி பிறப்பித்தால் அதனால் புதிய சிக்கல் உருவாகலாம்&’ என்றார்.

ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் சீனியர் வக்கீல்களின் வாதம் வரும் 28ம் தேதி தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *