பிரதமர் மன்மோன்சிங் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றிருந்தார். டொரன்டோ நகரில் இருந்து டெல்லிக்கு இன்று திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வைத் திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக் கையை ஏற்க இயலாது. ஏனெனில் இது மிகவும் தேவையான சீர்திருத்த மாகும்.
சமையல் கியாஸ் மற்றும் மண்எண்ணை விலையில் சிறு மாற்றம் செய்ய வேண்டியதும் தற்போதைய சூழ் நிலைக்கு தேவையாகி விட்டது. பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு மிக மிக அதிக அளவில் மானியம் கொடுத்து வருகிறது. இதை சீரமைக்க விலை மாற்றம் தேவையான ஒன்றாகும்.
பெட்ரோல், டீசல் விலையில் செய்யப்பட்டது போன்ற தேவையான சீர்திருத்தம் மற்ற துறைகளிலும் தொடருமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பதை நான் இப்போது உங்களிடம் சொல்ல முடியாது.
ஆட்சி முறையில் நாங்கள் சீர்திருத்தங்கள் செய்யும் போது, அது உங்களுக்கு தெரியவரும். நாங்கள் மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை பொது மக்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நமது நாட்டில் அளவுக்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது. இது நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாகி விடக்கூடாது என்பதை எல்லாரும் உணர்ந்துள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சில நாடுகள் நெருக்குதல் கொடுத்ததால் பெட்ரோலிய பொருட்கள் விலையை நாங்கள் மாற்றி அமைத்ததாக சொல்லப்படுகிறது. இதை நான் நிராகரிக்கிறேன். இந்திய அரசுக்கு உலகின் எந்தபகுதியில் இருந்தும் இது தொடர்பாக நெருக்குதல் வரவில்லை.
நமது நாட்டுக்கு என்ன சீர்திருத்தம் தேவையோ, அதை நாங்கள் செய்துள் ளோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாதாரண மக்களுக்கு சற்று சுமையாக இருக்கும் என்பதை அரசு அறிந்துள்ளது. ஆனால் இந்த சுமை சமாளித்து விடக் கூடியது தான் என்று நான் நினைக்கிறேன். எனவே எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் தேவையற்றது.
தீவிரவாதத்தை வேரோடு அழித்து ஒழிக்கும் நடவடிக்கைகளில், இனி பாகிஸ்தானின் நிலை மாறும் என்று நம்புகிறேன். அவர்கள் நமக்கு எதிராக தங்கள் மண்ணில் தீவிர வாதம் வளர இடம் கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்.
போபால் விஷவாயு வழக்கில் தொடர்புடைய ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இது தொடர்பாக நாங்கள் இதுவரை அமெரிக்காவை அணுகவில்லை.
இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் கூறினார்.
Leave a Reply