பெங்களூரு:பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த “பந்த்’ காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு முடங்கியது. ஆந்திராவில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த பந்த்தில் , தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு, நேற்று முடங்கிப் போனது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நேற்று விடுமுறை அறிவித்து இருந்தன. இந்த விடுமுறை தினம், வரும் சனிக்கிழமை அன்று வேலை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அந்நிறுவனங்கள் அறிவித்தன. மாநிலம் முழுவதும் இதே நிலை காணப்பட்டது.ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. இருந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. சென்னை-பெங்களூரு இடையேயான ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.கர்நாடக சட்டசபை நேற்று கூடியும், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பியதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடு கைது:ஆந்திராவிலும் ‘பந்த்’திற்கு நேற்று ஓரளவு வரவேற்பு இருந்தது. கம்மம், நலகொண்டா, ரங்கா ரெட்டி, கடப்பா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கினாலும், மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஐதராபாத் உஸ்மானியா பல்கலையில், நேற்று நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜமுந்திரியில் 700க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. ஐதராபாத், அமர்பீத் ஏரியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் வெங்கையா நாயுடு, தத்தாத்ரேயா, மாநில பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி, மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் ராகவலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply