சென்னை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட பொறியியல் கவுன்சிலிங், 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.
இதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பி.இ.,-பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று வரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 2ம் கட்ட கவுன்சிலிங் அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை 125 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுகின்றனர்.
இம்மாதம் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள 11 நாள் கவுன்சிலிங்கில், மொத்தம் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
21ம் தேதி 165 ‘கட்-ஆப்’ வரையும், 22ம் தேதி 161, 23ம் தேதி 157, 24ம் தேதி 153, 25ம் தேதி 149, 26ம் தேதி 145, 27ம் தேதி 141, 28ம் தேதி 137, 29ம் தேதி 133, 30ம் தேதி 129, 31ம் தேதி 125 வரையும் ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி 21ம் தேதி 6,031 பேர், 22ம் தேதி 6,201 பேர், 23ம் தேதி 6,013 பேர், 24ம் தேதி 6,167 பேர், 25ம் தேதி 6,047 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டின் மூலம் பிளஸ் 2 மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்ட மாணவர்கள், புதிய மதிப்பெண் மற்றும் ‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையில், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
மாணவர்கள் கவுன்சிலிங் தேதி, நேர விவரத்தை, அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ( http://www.annauniv.edu/tnea2010/acascheduleII.pdf ) தெரிந்து கொள்ளலாம்.
இதர மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி மற்றும் நேர விவரம் பின்னர் அறிவிக்கப்படுமென அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply