சென்னை : “ஏனாம் பகுதியில் கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு திட்டத்தை அமல்படுத்தும் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் தொகுதி, ஆந்திராவில் உள்ளது. இப்பகுதியில் தரியாலடிப்பா கிராமத்தில் கோதாவரி ஆற்றுப் படுகையில், இயற்கை எரிவாயு மேம்பாட்டு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை, புதுச்சேரி அரசும், ரிலையன்ஸ் நிறுவனமும் மேற்கொண்டன. இதை எதிர்த்து, ஏனாம் பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: கோதாவரி ஆற்றுப்படுகையில் பைப்லைன் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இப்பகுதியில் 25 சதவீதம் பேர் மீனவர்கள். கோதாவரி ஆற்றை நம்பி உள்ளனர். இந்தத் தொழிற்சாலையை நிறுத்தவில்லை என்றால், இங்குள்ள தென்னை, சதுப்பு நிலம் அழிந்து விடும். வெள்ளப் பெருக்கும் ஏற்படக் கூடும். அழிவில் இருந்து இவை காப்பாற்றப்பட வேண்டும். எனவே, கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் தொழிற்சாலை துவங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், அக்பர்அலி அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: ஒப்புதல் பெறுவதற்கு முன்னே, திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கி விட்டது. இந்த நிறுவனத்தின் நடவடிக்கை, வேதனையை தருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டால், அது அனைவரையும் பாதிக்கும். நிபுணர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அறிக்கையை புதுச்சேரி அரசு கேட்டுப் பெற வேண்டும். சுற்றுச்சூழல் நிர்வாக திட்டத்தை, ரிலையன்ஸ் நிறுவனம் முன்வைக்க வேண்டும். அதற்கு நிபுணர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். எதிர்காலங்களில் சேதத்தை தடுக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது ஆய்வு நடத்துவதற்கு அடிப்படை கட்டமைப்பையும், நிபந்தனைகளை அமல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உட்பட்டு அனுமதியளிக்கலாம். ரிலையன்ஸ் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்குவதற்கு முன், திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில், அதை வெளியிடுமாறு அரசு கேட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான், பொதுமக்களுக்கு விவரங்கள் தெரிய வரும். இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply