சென்னை :லஞ்ச ஒழிப்புத் துறையின் கையேட்டை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், உமாசங்கர் மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் கையேட்டை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் உமாசங்கர் தாக்கல் செய்த மனு: நான் நேர்மையான, உண்மையான அதிகாரியாக இருப்பதால், என்னை அடிக்கடி இடமாற்றம் செய்கின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, எனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, விசாரணைக்கு தடை உத்தரவு பெற்றேன்.
மனு இன்னும் நிலுவையில் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கையேட்டின்படி, விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நிர்வாக உத்தரவுகள் அடங்கிய தொகுப்பு தான் இந்த கையேடு. ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளுக்கு முரணாக இந்த கையேடு உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவின்படி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி தனபாலன் விசாரித்தார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.
Leave a Reply