சென்னை : “”மேலவை தேர்தலுக்காக தொகுதிகளை வரையறை செய்ய பெற்ற பட்டியலில், தமிழகத்தில் 3.6 லட்சம் ஆசிரியர்களும், 13 லட்சம் பட்டதாரிகளும் உள்ளனர்,” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மேலவை அமைப்பது தொடர்பாக, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலும், மாவட்டங்கள் மற்றும் தலைமைச் செயலக துறைகளில் இருந்தும் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளை வரையறை செய்வதற்கான பரிந்துரைகள் தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. ஒன்றிரண்டு நாட்களில் இந்த பரிந்துரைகள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். பட்டப்படிப்புக்கு இணையான தகுதிகளை பொறுத்தவரை, இந்திய தேர்தல் கமிஷனின் ஒப்புதலுடன் தமிழக அரசு தகுதிகளை வரையறுக்க வேண்டும். இதற்கான பரிந்துரைகள் இரண்டு நாட்களில் வகுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள கல்வி மையங்கள் பற்றி குறிப்பிடுவதை பொறுத்தவரை, உயர்நிலைப் பள்ளிக்கு குறையாத கல்வி மையங்களை, தேர்தல் கமிஷனின் ஒப்பதலுடன் மாநில அரசு பட்டியலிட வேண்டும். இதன்பின், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்ய வேண்டிய 26 உறுப்பினர்களுக்கான தொகுதிகள், பட்டதாரிமற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டிய தலா ஏழு உறுப்பினர்களுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்படும். பல்வேறு துறைகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் 3.6 லட்சம் ஆசிரியர்களும், 13 லட்சம் பட்டதாரிகளும் உள்ளனர். மாவட்ட வாரியாக இவர்களது எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் தொகுதிகள் வரையறை செய்யப்படும். மாவட்டங்களை பிரிக்காத அளவில் இவை அமையும். இதர பரிந்துரைகளை மாநில அரசு குறிப்பிட வேண்டும். இதன்பின், வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். அப்போது தான், உண்மையான பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தெரியவரும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
நரேஷ் குப்தா நைஜீரியா பயணம்: இந்திய தேர்தல் கமிஷனின் பிரதிநிதியாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நைஜீரியா செல்கிறார். நைஜீரியா நாட்டில் வரும் நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வாக்காளர்களை பதிவு செய்வதற்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நைஜீரியா தேர்தல் கமிஷன், இந்திய தேர்தல் கமிஷனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்திய தேர்தல் கமிஷனின் பிரதிநிதியாக நரேஷ் குப்தா, நைஜீரியா செல்கிறார். அதன் தலைநகர் அபுஜாவில் நடக்கும் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்க உள்ளார். வரும் 29ம் தேதி சென்னை திரும்புகிறார். இம்மாதத்துடன் இவர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply