சென்னை: “போலி சான்றிதழை சமர்ப்பித்த 25 மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும் கல்லூரிகள் ‘சீட்’ வழங்கக் கூடாது,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.
மேலும், பிளஸ் 1 சேர்க்கை நடத்தும்போது, 10ம் வகுப்பு சான்றிதழை பள்ளி நிர்வாகங்கள் கவனமாக பார்க்க வேண்டும். அதில், போலி சான்றிதழ்கள் இருந்தால், உடனடியாக தேர்வுத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
பிளஸ் 2 மாணவர்கள் 25 பேர், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர முயற்சித்த விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள், மறு மதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் அதிகரித்ததாகக் கூறி, போலி மதிப்பெண் பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலையில் சமர்ப்பித்தபோது, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த மாணவர்களிடம் இருந்து, அனைத்து போலி சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், தேர்வுத்துறை வழங்கிய அசல் சான்றிதழ், இன்னும் மாணவர்களிடம் தான் இருக்கின்றன. இந்த முறைகேடுகளில் இன்னும் யார், யாருக்கெல்லாம் தொடர்புகள் இருக்கின்றன என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தங்களிடம் உள்ள அசல் சான்றிதழ்களை பயன்படுத்தி, சில மாணவர்கள் கல்லூரிகளில் சேர முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கிய 25 மாணவர்களும், உயர்கல்வியில் சேர்வதற்கு கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பிரச்னையில் சிக்கிய மாணவர்களிடம் இருந்து, போலி மதிப்பெண் பட்டியல் மட்டும் தான் எங்களுக்கு கிடைத்தது. அசல் சான்றிதழ் அவர்களிடம் தான் இருக்கிறது. எனவே, அதை பயன்படுத்தி சில மாணவியர், கல்லூரிகளில் சேர முயற்சித்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, சர்ச்சையில் சிக்கிய மாணவ, மாணவியரை எக்காரணம் கொண்டும் கல்லூரிகளில் சேர்க்க, நிர்வாகங்கள் அனுமதிக்கக் கூடாது.
போலீசார் விசாரணை நடந்து வரும் நிலையில், இதுபோன்ற முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுவது தவறு. போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்த மாணவ, மாணவியரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம்.
மேலும், பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை நடைபெறும் போது, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பள்ளி நிர்வாகம் கவனமாக பார்க்க வேண்டும். சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால், உடனடியாக தேர்வுத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படியில்லாமல் சேர்க்கை நடத்தினால், அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு வசுந்தரா தேவி கூறினார்.
Leave a Reply