அரசு விழாக்களில் தமிழில் தான் பேச வேண்டும் : கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

கோவை : “”தமிழக அரசு விழாக்களில் பேசும் அதிகாரிகள், இனி தமிழில் தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராக வேண்டும்,” என, முதல்வர் கருணாநிதி கோவையில் வேண்டுகோள் விடுத்தார்.

கோவையில் 380 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள டைடல் பூங்காவை, முதல்வர் கருணாநிதி நேற்று மாலை திறந்து வைத்தார்.

இதன் பின் நடந்த விழாவில் முதல்வர் பேசியதாவது : கோவையை சிறப்படையச் செய்யவும், செழிப்பு அடையச் செய்யவும் இந்த தொழில் நுட்பப் பூங்கா துவக்கப்பட்டுள்ளது. எனக்கு முன் பேசியவர்கள், கோவைக்கு சீரும் சிறப்பும் வர நான்தான் காரணம் என்றனர். இது கோவைக்கு நான் செலுத்தும் நன்றிக் கடன். 1947-1948ல் கோவையில் நான் வாழ்ந்தேன். இதனால் கோவைக்கு நானும் சொந்தக்காரன்தான். 1970-71ல் பஞ்சாப் மாநிலத்துக்கு அந்த மாநில முதல்வரால் அழைக்கப்பட்டேன். அங்குள்ள வேளாண் பல்கலையை காண்பித்தனர். அங்கிருந்து வந்தபின் அதே போன்ற வேளாண் பல்கலையை கோவையில் தான் அமைக்க வேண்டும் என திட்டமிட்டேன். கோவை வேளாண் பல்கலை மாணவியர் தருமபுரிக்கு பஸ்சில் சுற்றுலா சென்றபோது எரிக்கப்பட்டனர். அப்போது, கோவையில் இப்பல்கலையை துவக்கியதற்காக வருத்தம் ஏற்பட்டது. கோவை என்னை வளர்த்த ஊர். கலைத்துறை, அரசியல் துறைகளில் என் வளர்ச்சி கோவையில்தான் ஆரம்பம் ஆனது. அதன் காரணமாகவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த கோவையை தேர்வு செய்தேன். இங்கு தமிழக தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் தமிழில் பேசினார். பேச முடியாமல் தத்தளித்தார். தமிழை கொலை செய்யக் கூடாது என்பதற்காக அவரை ஆங்கிலத்தில் பேசச் சொன்னேன். ஆனால் இதைக் கண்டு அவர் சோர்ந்து விடக்கூடாது. அடுத்து வரும் மேடைகளில் நல்ல தமிழில் பேச பயிற்சி பெற வேண்டும். இந்த விழாவில் மாற்றியது போல் அனைத்து விழாக்களிலும் ஆங்கிலத்தில் பேசுமாறு மாற்ற முடியாது.

அரசு விழாக்களில் அதிகாரிகள் இனி தமிழில் தான் பேச வேண்டும். ஓரிரண்டு ஆவணங்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. அது அதிகாரிகளின் குற்றம் அல்ல. செம்மொழி மாநாட்டுக்கு பின்பாவது, நமது ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கட்டாயமாக தமிழில் தான் ஆவணங்களை கையாள வேண்டும். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அல்ல; என்னைப் போல் ஆங்கிலம் தெரியாத பல அமைச்சர்களுக்காகவே இந்த ஏற்பாடு. எண்ணங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்த தமிழ்தான் சிறந்தது. இந்திய குடிமைப் பணி படிப்புகள் படித்து பயிற்சி எடுத்து வருபவர்கள் நம் மாநிலத்தில் ஆங்கிலத்தில் பேசுவது தமிழுக்கு நல்லது அல்ல. இங்கு துவக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா மூலம் வேலை வாய்ப்பு பெருகும். 12 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும். வேலை இல்லை என்ற தொல்லையில் இருந்து விடுபடலாம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சென்னையில் முதல் தகவல் தொழில் நுட்பப் பூங்கா துவக்கப்பட்டது. அதன் பின் இந்தியாவில் பல தொழில்நுட்ப பூங்காக்கள் துவக்கப்பட்டன. இன்னும் சில பூங்காக்கள் திறக்கப்படவுள்ளன. இன்னும் அதிக பூங்காக்கள் துவக்க துவக்க வளர்ச்சி விரிவடையும். அதன் மூலம் பல நாட்டு தொடர்புகள் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *