தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஒப்பந்த விதியின் கீழ் (10 ஏ1) நியமிக்கப்படும் அரசு டாக்டர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம் கிடைக்கும்.
தமிழகத்தில் மொத்தம் 1,589 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 3,987 டாக்டர்கள் உள்ளனர்; இப்போது 702 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களில் 683 காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இந்த மாதம் இரண்டாவது வாரம் சென்னையில் நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2008-2009-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் வரை நியமனம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதலாக 32 விஷமுறிவு சிகிச்சை மையங்கள்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே 34 விஷமுறிவு சிகிச்சை மையங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கடந்த ஓராண்டில் 55,000 பேர் விஷமுறிவு சிகிச்சை பெற்றனர்; இவர்களில் 98 சதவீதம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
விஷ முறிவு சிகிச்சையின் அவசியத்தை கருத்தில்கொண்டு அரசு மருத்துவமனைகளில் ரூ.4 கோடியில் மேலும் புதிதாக 32 விஷமுறிவு சிகிச்சை மையங்களை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.33 கோடியில் 200 ஆம்புலன்ஸ்: இதேபோன்று கூடுதலாக 200 அவசர சேவை ஆம்புலன்ஸ் வாகனங்கள் (“108′) வாங்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, மொத்தம் ரூ.33 கோடியில் இந்த ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ஸ்ரீபதி தலைமையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ், சிறப்புச் செயலர் டாக்டர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கான அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply