வாஷிங்டன்: “இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்’ என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப், பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்ததும், ஆளும் கட்சி மற்றும் அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில் பதவி விலகினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்ட முஷாரப் மீது பாகிஸ்தானில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. நாடு திரும்பினால் கைது செய்யப்படும் சூழல் உள்ளதால் முஷாரப் பிரிட்டனில் தங்கியுள்ளார். சமீபத்தில் அவர் அரசியல் கட்சியை துவக்கியுள்ளார்.
இதற்கிடையே அவர் ஜெர்மன் நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் உருவாக இந்தியா காரணமாக இருந்தது. காஷ்மீரில் எங்கள் சமூகத்தினர் போராட்டம் நடத்தும் போது நாங்கள் உதவாமல் இருக்க முடியாது. பொதுவாக உலகம் முழுவதும் இந்த நடைமுறை உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் காஷ்மீர் விஷயத்தில் அக்கறை செலுத்தாமல் இருந்தார். இதனால், ராணுவ தளபதி பொறுப்பில் நான் இருந்த போது இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம். காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகள் கருத்து தெரிவிக்கும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடும் காஷ்மீர் விஷயத்தில் ஐ.நா., தீர்மானத்தின் படி செயல்படாத இந்தியாவை கண்டிக்கவில்லை. கார்கில் விஷயத்தில் எங்கள் நடவடிக்கை சரியானது தான். இவ்வாறு முஷாரப் கூறினார்.
Leave a Reply