மதுரை: சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கணித வினாத்தாள் மாதிரி தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு முதல் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில், 2 முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இப்புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டங்கள் எழுதும் பணி முடிந்துள்ளது. தற்போது, வினாத்தாள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் அமையும் முறை பற்றி ஆலோசனை நடந்தது. இதில், தர்மபுரி, விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, விருதுநகர் உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கணித ஆசிரியர்கள் பங்கேற்றனர். இம்மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி பள்ளிக்கு அழைக்கப்பட்டனர்.
இதில் அரசு, உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட மாதிரி வினாத்தாளை அடிப்படையாக கொண்டு, கணித வினாத்தாள் அமைய வேண்டிய முறை, செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், ஒரு மதிப்பெண், குறு வினாக்கள், பெரு வினாக்கள் அமைய வேண்டிய முறை குறித்து ஆலோசனை கேட்கப்பட்டது. இவர்களில் பலர், தற்போதுள்ள 15 ஒரு மதிப்பெண் வினாக்களை 20 ஆக அதிகரிக்கவோ, 10 ஆக குறைக்கவோ செய்யலாம் என ஆலோசனை வழங்கினர்.
வினாத்தாளில் வரைபடம், ஜியோமெட்ரி பகுதி வினாக்களில் அதிக மாற்றம் செய்ய வாய்ப்பளிக்கப்படவில்லை. பொதுவாக, 80 சதவீத மதிப்பெண்ணை எளிதாக பெறும் வகையிலும், 20 சதவீத மதிப்பெண்ணை சற்று கடினமாக புரிந்து, படித்துப் பெறும் வகையிலும் வினாத்தாள் மாதிரியை ஆசிரியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இக்குழுவினர் பரிந்துரைத்துள்ளபடி சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வினாத்தாளின் இறுதி மாதிரியை தேர்வு செய்து ஒப்புதல் அளித்தபின் அமல்படுத்தப்படும்.
Leave a Reply