டாலர் மதிப்பு சரிவால் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துவருவதால் ஜவுளி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கோவை, திருப்பூர் ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.


இரண்டு மாதங்களுக்கு முன்னர் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 47 ரூபாயாக இருந்தது, அது தற்போது 44 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது தங்களது ஏற்றுமதிக்கு கிடைக்கும் வருவாயை பெருமளவிற்கு பாதிக்கிறது என்று கூறியுள்ள ஏற்றுமதியாளர்கள், ஏற்கனவே ஏற்றுமதிக்கு அளிக்கும் தீர்வை சலுகை விகிதக் குறைப்பாலும், உயர்ந்துவரும் நூல் விலையாலும், சுருங்கிவரும் உள்ளூர் சந்தையாலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில், ரூபாயின் மதிப்பு உயர்வால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளனர். அந்நியச் செலாவணிச் சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை சந்தையின் போக்கிற்கு விட்டுள்ள அரசு, பங்குச் சந்தைகளில் வரும் அந்நிய நிறுவன முதலீட்டிற்கு கட்டுப்பாடு விதித்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த முடியும் என்றும், அதனைச் செய்யாவிட்டால், குறைந்தபட்சம், பங்குச் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது திரும்பப்பெறக் கூடாது என்ற கட்டுப்பாட்டையாவது கொண்டு வர வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 22 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு (டாலரில்) இந்திய பங்குச சந்தைகளில் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாதங்களில் மட்டும் ரூபாயின் மதிப்பு 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிய நிறுவன முதலீடு ஒரே நேரத்தில் மிகப் பெரும் அளவிற்கு வந்தால், இந்திய ரிசர்வ் வங்கி தலையிடும் என்று அதன் கவர்னர் சுப்பா ராவ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *