தி.மு.க.,வில் சதி: அமைச்சர் “திடுக்’ தகவல்

posted in: அரசியல் | 0

சேலம் : “”நான் தி.மு.க.,வில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்,” என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சேலத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உள்ளிட்ட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அமைச்சரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமாரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பார்த்து வந்ததற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:நான் நீண்டகாலமாக தி.மு.க.,வில் பணியாற்றி வருகிறேன். அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை கொடுத்து வருவதாக அறிகிறேன். இதற்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என தெரியவருகிறது.சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலராகவும் சுரேஷ்குமார் பணியாற்றி வருகிறார். அவர் என் சின்ன தாயாரின் பேரனும், தம்பி மகனுமாவார். அவரை இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நான், சிறைக்குச் சென்று பார்த்து வந்தேன்.இதில் எந்தவித தவறும் இல்லை. தேவையில்லாமல் இந்த வழக்கில் என்னை களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, கட்சியில் உள்ள ஒருசிலர் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தொடர்பு கொண்டும், பொய் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது.இறந்த குப்புராஜின் மகன் சிவகுரு, சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, அந்த கொலை வழக்கை முதலில் மாவட்ட எஸ்.பி.,தான் விசாரித்து வந்தார். அதன் பின், சிவகுருவின் மகன் கோகுலை போலீசார் கைது செய்தனர்.

அப்போது நானும், என் தந்தையும் சேர்ந்து தான் கொலை செய்தோம் என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.நீதிமன்றத்தில் சரணடைந்த சிவகுருவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, மகன் சொன்ன கருத்தையே அவரும் கூறியுள்ளார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், தி.மு.க.,வை களங்கப்படுத்த, தி.மு.க.,விலேயே உள்ள ஒரு சிலர் ஈடுபடுவதை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் எடுத்துக் கொண்டு கட்சித் தொண்டர்களை மிரட்டுவதை நான் கண்டிக்காமலும் விடமுடியாது. இந்த வழக்கு சம்பந்தமாக இன்றைய தேதி வரை மாவட்டத்தில் உள்ள எந்த போலீஸ் அதிகாரியையும் நான் தொடர்பு கொள்ளவில்லை.இப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரையும் நான் எந்த விதத்திலும் தொடர்பும் கொள்ளவில்லை. இந்நிலையில், பத்திரிகைகளில் தவறான செய்திகளை வழங்கி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சில புல்லுருவிகள் தோன்றியிருப்பது தான் எனக்கு வேதனையளிக்கிறது.இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *