ஒரு கூடுதலான வெளிநாட்டு மொழியை கற்பது, மனத்திறன் மற்றும் அறிவுத்திறனை வளர்ப்பதோடு, சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது.
ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை கற்பது நமது வாழ்வில் எத்தகைய வாய்ப்புகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி இங்கே சற்று அலசுவோம்.
மனம்-அறிவு-திறன் மேம்பாடுகள்:
ஒரு அந்நிய நாட்டின் மொழியை கற்பதன் மூலம், அந்நாட்டு கலாச்சாரம், சமூகம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய விஷயங்கள் நம் அறிவில் ஏறுவதால், நம் பார்வை விசாலமடைகிறது. வரலாற்றின் புதிய அம்சங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுவதோடு, குறுகிய மனப்பான்மை நீக்கப்படுகிறது.
பல மொழிகளைக் கற்ற ஒருவர், பல தரப்பு மக்கள் மத்தியில் ஒரு சமாதான தூதுவராக செயல்படும் வாய்ப்புகள் இருப்பதால் அவரின் தனித்திறன் பெரியளவில் மேம்படுகிறது. பொதுவாக கலாச்சாரங்களுக்கிடையிலான மொழிப் பிரச்சினை பல தவறான புரிதல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்நிய மொழிகள் பலவற்றை அறிந்த ஒருவர், இந்த சிக்கலை தவிர்த்து, இரண்டு பிரிவுக்குமான ஒரு இணைப்பு பாலமாக செயல்படுவதன் மூலம் நல்ல தன்னம்பிக்கை பெறுகிறார்.
வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு பயன்கள்:
ஒரு நாட்டின் வணிக சூழலைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் அந்நாட்டின் மொழி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இன்றைய சூழலில் பல நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை சர்வதேச அளவில் விருத்தி செய்து நடத்துவது மிகுந்த சர்வசாதாரணமான விஷயம். அதிலும் சுற்றுலா, தகவல் தொடர்பு, விளம்பரம், கல்வி மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் சர்வதேச தொடர்புகள் தவிர்க்க முடியாதவை.
ஐ.டி மற்றும் ஐ.டி சாராத நிறுவனங்களும் சர்வதேச அளவில் தங்களின் வணிகத்தை விஸ்தரிக்கின்றன. எனவே மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் அனைத்தும் தமது நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் ஆகியோர் குறைந்தபட்சம் சில வெளிநாட்டு மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஏனெனில் அப்போதுதான், அந்நாட்டு வாடிக்கையாளரை கையாள முடியும். இத்தகைய பன்மொழி திறமையாளர்களுக்கு மிக அதிக சம்பளம் மற்றும் மரியாதை உண்டு.
முன்பு ரஷ்ய, பிரெஞ்சு மொழிகள் அதிகமாக கற்கப்பட்டன. ஆனால் தற்போது சீன மொழி பெரியளவில் பிரபலமடைந்து வருகிறது. ஏனெனில் அம்மொழியை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசுகிறார்கள். சீனா பொருளாதார துறையில் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வரும் நாடு. எனவே அங்கு கடை விரிப்பதற்கு பலநாட்டு நிறுவனங்களும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியாவும் தனது நெருக்கமான போட்டியாளராக இருக்கும் சீனாவில் வர்த்தக செயல்பாடுகளை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. பல இந்திய நிறுவனங்கள் சீனாவில் தங்கள் கிளைகளை துவக்கியுள்ளன. எனவே இத்தகையச் சூழலில் சீன மொழி தெரிந்தவர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார்கள். சீன மொழியை அடிப்படை அளவிலாவது புரிந்துகொள்ளும் நிலையில் உள்ள ஒருவரை பணியமர்த்த இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. சீன மொழியானது பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாது தற்போது ஆன்லைனிலும் கற்பிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் ஆங்கிலத்தை மறந்துவிடக் கூடாது. சர்வதேச மீடியமாக ஆங்கிலம் இருப்பதால், நாம் மேற்குறிப்பிட்ட துறைகள் அனைத்திலும் இதன் பயன்பாடு தவிர்க்க முடியாதது. முன்பு ஆங்கிலத்திற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்காத ஜப்பான், சீனா, கொரியா உள்ளிட்ட பல நாடுகள் தற்போது ஆங்கிலத்தை ஒரு முக்கிய மொழியாக தங்கள் நாட்டு கல்வி நிறுவனங்களில் வைத்துள்ளன. மேலும் வேறு பல வெளிநாட்டு மொழிகளை படிப்பவர்களுக்கும் ஆங்கிலமே அடிப்படையாக இருக்கிறது. இதனால் ஆங்கிலம் முதல் முக்கியத்துவம் கொடுத்து கற்கப்பட வேண்டிய மொழியாக அப்போதும்-இப்போதும் இருக்கிறது.
Leave a Reply