புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, இன்று மீண்டும் நடக்கிறது.
இரண்டாம் தலைமுறை அலைவரிசையான, “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, 2008ம் ஆண்டில் நடந்தது. இந்த ஒதுக்கீடானது, ஏல முறையில் நிர்ணயிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, முன்னுரிமை அடிப்படையில், வழங்கப்பட்டது. 121 பேருக்கு இப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏல முறையில் வழங்காமல், முன்னுரிமை அடிப்படையில் வழங்கியதால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 29ம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ., துரிதமாக செயல்படவில்லை என, நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் மத்திய தொலைத்தொடர்புத்துறை, அமைச்சர் ராஜா, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். நோட்டீசிற்கு விரைவாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நோட்டீசிற்கு பதில் அளித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சமீபத்தில் ஆவணம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடானது, தற்போது அமலில் உள்ள கொள்கைகளின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டது. இதே கொள்கையை தான் அமைச்சர் ராஜாவுக்கு முன்னர் பதவியில் இருந்தவர்களும், முந்தைய ஆட்சியில் பதவியில் இருந்தவர்களும் பின்பற்றினர். சட்ட விதிமுறைகளின் படியே, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்றது. எந்த கம்பெனிகளுக்கும் சாதகமாக தொலைத்தொடர்பு அமைச்சகம் செயல்படவில்லை. இப்பிரச்னையில் சி.பி.ஐ.,யையோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்போ விசாரணை நடத்துவது தேவையற்றது. மேலும், அரசின் கொள்கை முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு கிடையாது. இவ்வாறு தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்தது.
“இப்பிரச்னை எழுப்பி பரபரப்பூட்ட வேண்டும் என்பதற்காகவே, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை வைத்து ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்’ என, சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் ராஜாவின் வக்கீல் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், “”2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை தற்போதைய நிலையில் எங்களால் மறுக்கவும் முடியாது அல்லது ஏற்றுக் கொள்ளவும் முடியாது,” என, தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், அன்னிய செலாவணி விதிகளை மீறிய கம்பெனிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என, அமலாக்கத் துறை இயக்குனரகம் கூறியுள்ளது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடக்கிறது. அப்போது பரபரப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply