மந்திரிகள் சொத்து விவரம் வெளியிட பிரதமர் ஆர்வம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்த முழு விவரமும், விரைவில் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. பிரதமர் அலுவலகம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு செயல் வடிவம் கொடுத்துள்ளார்.மத்திய அமைச்சர்கள் அனைவரின் சொத்து பட்டியலும், விரைவில் பிரதமர் அலுவலக இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மத்திய அமைச்சரவை செயலர் சந்திரசேகர், இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில்,”அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என, பிரதமர் விரும்புகிறார். இதில் ஒளிவு மறைவற்ற போக்கு பின்பற்றப்பட வேண்டும் என, அவர் கருதுகிறார்.

எனவே, அனைத்து அமைச்சர்களும், தங்களது சொத்துக்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிவித்து உதவ வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.காமன்வெல்த் போட்டி ஏற்பாடு, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம், ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் சரமாரியாக தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *