கொழும்பு : இலங்கை அதிபராக இரண்டாவது முறையாக ராஜபக்ஷே நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது,”ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றிக் காட்டுவேன்’என, அறிவித்தார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற்றதை அடுத்து, கடந்த ஜனவரியில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராஜபக்ஷே மீண்டும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதையடுத்து, இலங்கையில் அதிபராகப் பதவி வகிப்பதற்கு உள்ள காலக் கெடுவை மாற்றி, கடந்த செப்டம்பரில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், அதிபரின் முதல் ஆறாண்டு பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, நேற்று இரண்டாவது முறையாக நாட்டின் ஜனாதிபதியாக ராஜபக்ஷே பதவியேற்றுக் கொண்டார். இலங்கை தலைமை நீதிபதி அசோகா டி சில்வா, அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையொட்டி, ராணுவத்தினரின் கண்கவர் அணிவகுப்பும் நடந்தது. பதவியேற்பு விழா நிகழ்ச்சிகள் “டிவி’யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசியதாவது: இலங்கையில் ஏராளமான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஹம்பன்தொடா துறைமுகப் பணிகள் முடிந்து, வெற்றிகரமாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அதிபராக பதவியேற்றபோது, என்ன வாக்குறுதிகள் அளித்தேனோ, அதை நிறைவேற்றியுள்ளேன். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இலங்கையை ஆசியாவின் அதிசய தீவாக மாற்றிக் காட்டுவேன். இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.
பதவியேற்பு விழாவை, எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி., ஆகியவை புறக்கணித்தன.
Leave a Reply