சின்னசேலம் : சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள, சரக்கு இறக்குமிடத்திற்கு இந்திய உணவு கழகம் சார்பில், பஞ்சாபிலிருந்து அனுப்பிய 2,600 டன் பச்சரிசி நேற்று வந்து சேர்ந்தது.
தமிழக அரசு பொங்கல் விழாவிற்கு அறிவித்தபடி, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பச்சரிசி சின்னசேலம் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. சரக்கு ரயிலில், 42 வேகன்களில் வந்துள்ள 2,600 டன் அரிசியை சரக்கு இறக்கு மிடத்தில் 60 லாரிகளில் 160 கூலியாட்கள் இறக்கினர்.
சின்னசேலம் ரயில் நிலையம் அருகிலுள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இங்கிருந்து விழுப்புரம், சேலம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி மக்களுக்கு வினியோகிக்கப்படும். ரயிலில் வந்த அரிசியை, லாரிகளில் ஏற்றும் பணிகளை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் மாரிமுத்து, துணை மேலாளர் குப்புசாமி, இந்திய உணவுக்கழக அதிகாரி பாலகிருஷ்ணன் பார்வையிட்டனர்.
சின்னசேலம் ரயில் நிலையத்தில் சரக்கு இறக்குமிடத்தில் போதுமான மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சரக்கு இறக்கும் பிளாட்பாரம், மிகவும் பழுதடைந்துள்ளதால் அரிசி மூட்டைகள் ஏற்றிய லாரிகள், அங்கிருந்து வெளியே செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றன. சேமிப்பு கிடங்குகளுக்கு செல்லும் வழி சேறும், சகதியுமாக மாறியுள்ள நிலையில் அங்கு லாரிகள் செல்ல சிரமம் ஏற்பட்டது.
Leave a Reply