சிகிச்சை பெறும் மகனை பார்க்க தாயாருக்கு மறுப்பு : 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : சிகிச்சை பெறும் மகனை பார்க்க அனுமதிக்காததால், தாயாருக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க, இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த விஜயா என்பவர் தாக்கல் செய்த மனு: எனது மகன் சின்னா, ஒரு கூலித் தொழிலாளி. திருப்பதியில் வசிக்கிறான். கடந்த மாதம் 29ம் தேதி இரவு 9 மணியளவில், பாரிமுனையில் சமூக விரோதிகள் சிலர், எனது மகனை தாக்கினர். இதுதொடர்பாக, வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் சின்னா புகார் கொடுத்தான். காயமடைந்த எனது மகன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றான்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், எனது மகனை தாக்கினர். அவனை சட்டவிரோத காவலில் வைத்தனர். மறுநாள் உயர் அதிகாரிக்கு தந்தி அனுப்பினேன். போலீஸ் வசம் சட்டவிரோத காவலில் உள்ள எனது மகனை விடுவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கிங்ஸ்டன் ஜெரால்டு ஆஜரானார். “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: மாஜிஸ்திரேட் முன் சின்னாவை ஆஜர்படுத்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவரது தாயார் உடன் இருக்க வேண்டும் என முதலில் உத்தரவிடப்பட்டது. மனுதாரர் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுக்களை முதலில் போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. பின், கூடுதலாக தாக்கல் செய்த பதில் மனுவில், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து கடந்த 10ம் தேதி சின்னா, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் மகன் இருக்கும் போது, அவரை சந்திக்க தாயாரை அனுமதிக்காததன் மூலம், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் கஷ்டப்பட்டுள் ளார். எனவே, ஐஸ் அவுஸ் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது.

இந்தத் தொகை நஷ்ட ஈடாக மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும். இரண்டு இன்ஸ்பெக்டர்களும் தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய், தங்கள் கையில் இருந்துக் கொடுக்க வேண்டும். அதை, இரண்டு வாரங்களுக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *