அமெரிக்காவுடன் பனிப்போர் முடிந்தது : “நேட்டோ’ நாடுகளுக்கு உதவ ரஷ்யா முடிவு

posted in: உலகம் | 0

லிஸ்பன் : போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து முடிந்த “நேட்டோ’ நாடுகளின் உச்சிமாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக, அமெரிக்காவின் எதிரியாகக் கருதப்பட்ட ரஷ்யாவும் கலந்து கொண்டு, தனது உதவி “நேட்டோ’ நாடுகளுக்கு உண்டு என அறிவித்துள்ளது.

இதன் மூலம், பனிப் போர் முடிவு பெற்று விட்டதாக ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில், “நேட்டோ’ கூட்டமைப்பின் உறுப்பினர்களான 28 நாடுகளின் உச்சி மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், ஆப்கானிஸ்தானில் இருந்து “நேட்டோ’ படைகளை வாபஸ் பெறும் விவகாரம், முக்கியமான விஷயமாக விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் பேசிய ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், 2014க்குள் “நேட்டோ’ படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநாட்டில் பேசிய “நேட்டோ’ செயலர் ஆண்டர்ஸ் போக்,”2011ல் இருந்து படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படும். 2014க்குள் நாட்டின் பாதுகாப்பு ஆப்கன் படையினரிடம் ஒப்படைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில்,”ஆப்கன் படையினரிடம் அந்நாட்டை ஒப்படைப்பது என்பது, அமெரிக்காவின் சுயேச்சையான முடிவு. அதுதான் இம்மாநாட்டில் “நேட்டோ’ நாடுகளின் முடிவாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து இன்னும் ஒரு இறுதியான முடிவுக்கு அமெரிக்கா வரவில்லை. 2014க்குள் ஆப்கன் போர் முடிந்து விடும் என்பதற்கில்லை. அங்குள்ள நிலவரத்தைப் பொருத்து முடிவு மாறுபடும்’ என்றார்.

இதனால் 2014க்குப் பின்னும், அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஆப்கனில் தங்கியிருக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

ரஷ்யா சம்மதம்: இம்மாநாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக, இதுவரை அமெரிக்காவின் எதிரியாக பார்க்கப்பட்டு வந்த ரஷ்யா, மாநாட்டில் கலந்து கொண்டு, “நேட்டோ’ படைகளுக்கு உதவியளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. “நேட்டோ’ நாடுகளின் எல்லைகளை, வான்வழித் தாக்குதலில் இருந்து குறிப்பாக, சிரியா, லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பதற்காக, ரஷ்யாவும் உதவியளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்,”பனிப் போர் முடிந்து விட்டது. இதுவரை எதிரிகளாக இருந்த ரஷ்யாவும், “நேட்டோ’ நாடுகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவை ஏற்படுத்தியுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *