அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை கழிவுநீர் கலந்த குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த பாதுகாப்பற்ற குடிநீரை பருகியதன் காரணமாக 18, 29, 30 மற்றும் 32 ஆகிய வார்டுகளில் வசிக்கும் ஆதிதிரா விட மக்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு நிலைமை அதைவிட மோசமாக இருப்பதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள், மாத்திரைகள் எதுவும் மருத்துவமனையில் இருப்பதில்லை என்றும், சாதாரண நோய்க்கும் சேலம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் அவல நிலை நிலவுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஆத்தூர் நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான பொது விநியோகக்கடைகள் பல நாட்கள் திறக்கப்படுவதில்லை என்றும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மாதத்தில் ஒருநாள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், பிற உணவுப்பொருட்கள் வழங்கப்படுதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், ஆத்தூர் நகரில் உள்ள தெருக்கள் மிகவும் குறுகலாக இருப்பதன் காரணமாக, கட்டு மானப்பணிகளுக்கான பொருட்கள் டிராக்டர்கள் மூலம் இது நாள்வரை எடுத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் தற்போது டிராக்டர்கள் மூலம் எடுத்துச்செல்லக்கூடாது என்ற புதிய உத்தரவின் காரணமாக, கட்டுமானப் பொருட்களை பிரதான சாலையிலிருந்து தங்கள் வீட்டிற்கு மக்களே எடுத்துச் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மீறி டிராக்டரில் எடுத்துச்சென்றால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வருகின்றன.
காங்கிரஸ் எம்.பி. மேம்பாட்டு நிதியில் வசிஷ்ட நதியில் அமைக்கப்பட்டுள்ள பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாகவும், ஆத்தூர் பஸ் நிலையத்தினுள் அண்ணா சிலை அமைப்பதாக கூறி உதயசூரியன் சின்னத்தை அமைத்து, போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் வகையில் தி.மு.க.வினர் ஆக்கிரமிப்புகளை செய்துள்ளதாகவும், கழக நகரமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும், 2 லட்சம் மக்கள் தொகையினைக்கொண்ட ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய இரு நகராட்சிகளுக்கும், 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு காவல் நிலையம் இருப்பதன் காரணமாக புகார் கொடுப்பதில் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் பலமுறை முறையிட்டும், போராட்டங்கள் நடத்தியும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை.
இதை வலியுறுத்தி சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.
Leave a Reply