டிராவிட் சதம்-டோணி அட்டகாசம்-50வது செஞ்சுரியை நழுவ விட்ட சச்சின்

நாக்பூரில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் அபாரமாக ஆடி சதம் போட்டார். இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் டிராவிட். டோணியும் அபாரமாக ஆடி அரை சதம் போட்டார்.

தனது 50வது சதத்தை நோக்கி முன்னேறி வந்த சச்சின் டெண்டுல்கர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா டிரா கண்டது. இந்த நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸை 193 ரன்களுக்கு இழந்தது. இதையடுத்து இந்தியா தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷேவாக்கும், கம்பீரும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கம்பீர் 78 ரன்களும், ஷேவாக் 74 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிடும், சச்சினும் பிரமாதமாக ஆடினர். சச்சின் தனது 50வது டெஸ்ட் சதத்தை இதில் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதற்கேற்ப பொறுமையாக ஆடி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து விட்டார்.

இருப்பினும் மறு முனையில் டிராவிட் நிதானமாக ஆடி சதம் போட்டார். தொடர்ந்து ஆடி வரும் அவர் தற்போது 164 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.

அவருடன் கேப்டன் டோணி 92 ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு டோணி சதம் போடவுள்ளதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

இந்தியா பிற்பகல் 2 மணி நிலவரப்படி 5 விக்கெட் இழப்புக்கு 505 ரன்களை எடுத்து வலுவான நிலையை எட்டியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *