தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பாம்பன் பாலத்தில் ராட்சத அலைகள், ரெயில் மீது மோதியது பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்

posted in: மற்றவை | 0

தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. பாம்பன் பாலத்தில் சென்ற ரெயில் மீது, கடலில் எழுந்த ராட்சத அலைகள் மோதின. இதனால் ரெயில் மெதுவாக சென்றது. பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை கொட்ட தொடங்கியது. பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், பெரும்பாலான இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

நாகை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. நாகை கடற்கரை சாலையில் உள்ள வேதநாயகம் செட்டி தெருவில் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக நல்ல மழை பெய்தது. மழை காரணமாக 30 வீடுகள் முழுமையாக இடிந்து உள்ளன. மண்டபம் பகுதியில் கடற்கரை அருகில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடிசைகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

பாம்பனில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் பாம்பன் பாலத்தின் மீது ரெயில்கள் மெதுவாக சென்றன. கடலில் எழுந்த அலைகள், ரெயில் பெட்டிகள் மீது மோதியபடி இருந்தன. இதனால் பயணிகள் பயத்துடன் ரெயிலில் பயணம் செய்தனர்

பரமகுடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏறத்தாழ 200 கிராமங்கள் மழை காரணமாக தீவு போல ஆகிவிட்டன. அவற்றுக்கு போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அந்த கிராமங்களில் உள்ளவர்கள் தவிக்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் உள்ள பெரிய கண்மாய், வைகை ஆற்றின் தண்ணீரால் முழுமையாக நிரம்பும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் முழுமையாக நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள செவ்வூர் கிராமத்தில வைகை ஆற்றங்கரையில் சத்தியராஜ் என்பவரின் மகன் சந்தோஷ்(வயது3) விளையாடிக்கொண்டு இருந்தான். அந்த சிறுவன், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். பின்னர் சிறுவனின் பிணம் மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே திரு உத்தரகோச மங்கை கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையும், தொன்மை சிறப்பும் வாய்ந்தது. இந்த கோவிலில் உள்ள அக்னிதீர்த்த குளம் மழையால் நிரம்பி, கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, நந்தி சிலை போன்ற அனைத்து பகுதிகளிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீரை, பம்பு செட் மூலம் வெளியேற்றி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் சோத்துப்பாக்கம் அணை பகுதியில் உள்ள ஊத்துக்குழி, குறவன் குழி, பேச்சியம்மன் சோலை, சுப்பிரமணியபுரம், கரும்பாறை, குண்டன்சி ஆகிய மலை வாழ் மக்களின் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

அந்த கிராமங்களுக்கு செல்லும் பாதையில் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. பெரிய பாறைகளும், மரங்களும் விழுந்து உள்ளன. இதனால் மீட்பு குழுவினர் அந்த கிராமங்களுக்கு செல்ல முடிய வில்லை.

விருதுநகர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழை காரணமாக, சாத்தூர் அருகே நென்மேனி-வன்னிமடை இடையே வைப்பாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் சேதம் அடைந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள 6 சிறிய அணைகள் நிரம்பி உள்ளன. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டுதான் இந்த அணைகள் நிரம்பி உள்ளன.

ராஜபாளையத்தில் உள்ள மறிச்சிகட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, வயல் வெளிக்குள் புகுந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் மழையால் நிறைந்து இருக்கிறது. இந்த குளத்தில் குளித்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ராகவ் சீனிவாசன் இறந்து விட்டார். அவர் மதுரையை சேர்ந்தவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

மதுரையில், வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தரைப்பாலங்கள் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

மேலூர் அருகே அ.வல்லாள பட்டியில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. மேலூரில் இருந்து அழகர் கோவில் செல்லும் சாலை, காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையாங்குடியில் நேற்று 5 செ.மீ. மழை பெய்தது. காரைக்குடி கணேசபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 254 கண்மாய்களில் 90 சதவீத அளவில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் பாதை 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. மழையால் 17-வது வளைவில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விட்டது. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிறுமலைக்கு செல்லும் பஸ்கள் 17-வது வளைவில் பயணிகளை இறக்கி விட்டு, வெறும் பஸ் மட்டும் அந்த பகுதியை கடந்து செல்கிறது. பின்னர் பயணிகள் பஸ்சில் ஏறிக்கொள்ள பயணம் தொடருகிறது.

செம்பட்டியில் உள்ள பழனி ரோட்டில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அந்த வழியே வந்த பஸ்சின் டிரைவர் இதை கவனித்து விட்டதால், பஸ்சை உடனடியாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் தண்ணீர் நிரம்பிய குளமாக காட்சி அளிக்கிறது. மழையால் இந்த மாவட்டத்தில் நேற்று 9 வீடுகள் இடிந்து விழுந்தன.

தூத்துக்குடி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்கிறது. இந்த மாவட்டத்தில் 57 வீடுகள் இடிந்து உள்ளன. இங்குள்ள 128 மானாவாரி குளங்களில் 57 குளங்கள் முழுமையாக நிரம்பி வழிகின்றன. மற்ற குளங்களில் பாதி அளவு தண்ணீர் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க 29 விசைப்படகு மீனவர்கள், பலத்த மழை-காற்று காரணமாக கரைக்கு திரும்பி விட்டனர்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *