மறைவாக உள்ள பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்!-வைகோ

posted in: மற்றவை | 0

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்போது மறைவாக உள்ளார். அவர் நிச்சயம் விரைவில் வெளிப்படுவார். தமிழீழம் மலரும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்வில் வைகோ, பழ நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் வைகோ பேசுகையில், “வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசிய கூட்டம் நினைவுக்கு வருகிறது.

28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப் புலிகள் பலியானதை குறிப்பிட்டார்.

பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது.

முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண் போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறுகிறார்.

ஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குதான் மக்களை மாற்றுகின்றனர்.

தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பௌத்த தலங்களாக மாறுகின்றன. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?

ஆயுள் தண்டனை கிடைத்தாலும்…

ஏற்கனவே என் மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.

காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.

பழநெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். இப்போது மறைவாக உள்ள அவர், அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருணத்தில் வெளியில் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்”, என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *